Published : 20 Apr 2023 07:58 PM
Last Updated : 20 Apr 2023 07:58 PM
மேட்டூர்: எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் ஒருவர் வெடி மருந்து போட்டு மீன் பிடித்ததில், அங்கு குளித்து கொண்டிருந்த இளைஞ்ர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவராங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மோகன்குமார் (22). கூலித்தொழிலாளி. இவர் தனது நண்பரான பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த பூபதி (22) என்பவருடன் சேலம் ஆணைப்புலிக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பூபதியும், மோகன்குமாரும் குளிப்பதற்காக காவிரி ஆற்றுக்கு நேற்று சென்றனர்.
ஆற்றில் அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது, ஊத்துக்குளிகாடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் (45) என்பவர் அங்கு மீன் பிடிக்க வந்துள்ளார். மோகன் குமார் தண்ணீரில் குளித்துக்கொண்டிருக்க, பூபதி கரையில் நின்று வேடிக்கை பார்த்து வந்துள்ளார். அப்போது, பெருமாள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தனது கைகளில் வைத்திருந்த பாறைகளை தகர்க்கும் வெடி மருந்து தோட்டாக்களை தண்ணீரில் வீசியுள்ளார். அப்போது, ஏற்பட்ட வெடி விபத்தில் மோகன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து பூலாம்பட்டி போலீஸார் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கும் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட மீனவர் பெருமாளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து சங்ககரி ஆர்டிஓ (பொ) தணிக்காசலம் இன்று மதியம் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். வெடி மருந்து பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தார். பின்னர், பூலாம்பட்டி பேரூராட்டி அலுவலகத்தில் மீனவர்களுடன் கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பேசும்போது, “காவிரி ஆற்றில் யாரும் வெடி மருந்து கொண்டு மீன் பிடிக்க கூடாது. அவ்வாறு செயலில் ஈடுபடுபவர்கள் கண்டறிந்தால் மீன் பிடிக்கும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
வெடி மருந்து கொண்டு மீன் பிடிப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் கொடுப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். இதுபோன்ற செயல்களில் தவிர்ப்பதால் உயிரிழப்பை தடுக்க முடியும்: என்றார். அப்போது, எடப்பாடி தாசில்தால் லெனின், பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம், பூலாம்பட்டி போலீஸார், மீனவர்கள் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT