Published : 19 Apr 2023 05:31 PM
Last Updated : 19 Apr 2023 05:31 PM
கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்தில் திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவரைக் கத்தியால் குத்திய உறவினரை போலீஸார் கைது செய்தனர்.
பட்டீஸ்வரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னரீசெல்வம் மகன் ராஜேந்திரன் (65). இவர் பட்டீஸ்வரம் 4-வது திமுக வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். ராஜேந்திரனுக்கும் இவரது சகோதரர் ராஜ் மகன் குமார்(40) என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், பட்டீஸ்வரம் கடைத்தெருவில் ராஜேந்திரன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குமார், ராஜேந்திரனை கத்தியால் கழுத்து மற்றும் முகத்தில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை, அருகிலுள்ளவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பட்டீஸ்வரம் போலீஸார் வழக்குப் பதிந்து, குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT