Published : 12 Apr 2023 02:41 PM
Last Updated : 12 Apr 2023 02:41 PM
கடலூர்: விருத்தாசலத்தில் ஐந்து வயது பள்ளிச் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளித் தாளாளர் பக்கிரிசாமியை போக்சோ சட்டத்தில் போலீஸார் கைது செய்துள்ளனர். திமுக கவுன்சிலரான இவர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
விருத்தாசலம் சக்தி நகரில் வைத்திய லிங்கா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி உள்ளது. இதற்கு தாளாளராக பக்கிரிசாமி (62) என்பவர் உள்ளார். மேலும், இவர் விருத்தாசலம் நகராட்சி 30-வது வார்டு திமுக கவுன்சிலராகவும் இருந்தார். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது பள்ளியில் விருத்தாசலம் புதுப்பேட்டை தேசிங்கு ராஜா நகரில் வசித்து தம்பதியினிரின் 5 வயது சிறுமி யுகேஜி படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் நேற்று (ஏப்ரல் 11) பள்ளிக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய சிறுமிக்கு பிறப்பு உறுப்பு பகுதியில் வலி ஏற்பட்டு அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுமியை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இது குறித்து தகவலறிந்த விருத்தாசலம் மகளிர் காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸார் தீவிர விசாரணை செய்து நடத்தினர். மேலும், இது தொடர்பாக பள்ளி தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமியிடம் விசாரணை நடத்தினர். மேலும், தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பள்ளி தாளாளர் பக்கிரிசாமி கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இன்று (ஏப்.12) விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், பள்ளி தாளாளர் பக்கிரிசாமி மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில் கட்டுப்பாட்டு மீறியும் கட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் பக்கிரிசாமியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கியுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரை முருகன் அறிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதன் விவரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; திமுக கவுன்சிலர் நீக்கம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT