Published : 12 Apr 2023 06:37 AM
Last Updated : 12 Apr 2023 06:37 AM

சென்னை | அதிக வட்டி தருவதாக கூறி ரூ.5,900 கோடி வசூலித்து மோசடி - ‘எல்என்எஸ்’ நிறுவனத்தின் முக்கிய பிரமுகர் கைது

சென்னை: அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி 84 ஆயிரம் பேரிடம்ரூ.5,900 கோடி மோசடி செய்த விவகாரத்தில் எல்என்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டியை தலைமையிடமாக கொண்ட எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனம் தங்களிடம் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது. இதை நம்பி பல ஆயிரம் பேர் அந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டு பணத்தை ஏமாற்றிவிட்டு, அந்த நிறுவன நிர்வாகிகள் தலைமறைவாகினர்.

இதனால் பணத்தை இழந்தவர்கள், தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில், எல்என்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 21 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, அந்த நிறுவனத்தின் முக்கிய தரகர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நிறுவனம் 84 ஆயிரம் பேரிடம் ரூ.5 ஆயிரத்து 900 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன்பாபு, வேத நாராயணன், லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன் ஆகியோருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 791 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.121.54 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.12.23 கோடி மதிப்புள்ள 49 அசையா சொத்துகள் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வீடு, நிலம், சொகுசு கார்: இந்நிலையில் அந்த நிறுவனத் தின் பிரதான முகவராக இருந்த விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (46) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் ஹரிஹரன், கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2022-ம்ஆண்டு வரையில் பலரிடம் ரூ.231 கோடி முதலீடாக பெற்று, அந்த நிறுவனத்துக்கு அனுப்பியிருப்பதும், இதில் ஹரிஹரனுக்கு ரூ.10 கோடி கமிஷன் கிடைத்திருப்பதும், அந்த பணத்தின் மூலம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, கோயம்புத்தூரில் வீட்டுமனை, விவசாய நிலம், சொகுசு கார் ஆகியவை வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x