Published : 10 Apr 2023 06:51 AM
Last Updated : 10 Apr 2023 06:51 AM

1 லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி: ஆருத்ரா கோல்டு நிறுவன நிர்வாகிகள் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

சென்னை: ஒரு லட்சம் பேரிடம் ரூ.2,438 கோடி வசூலித்து மோசடி செய்த விவகாரத்தில், ஆருத்ராகோல்டு நிறுவனர் உள்ளிட்ட 5 நிர்வாகிகளை தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர்.

சென்னை அமைந்தகரை மேத்தா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ராகோல்டு டிரேடிங் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இந்த நிறுவனம், தங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக வழங்கப்படும் என்றுகவர்ச்சிகரமான விளம்பரம் செய்தது.

இதை உண்மை என நம்பியபலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இதற்கிடையே, இந்ததிட்டத்தின் மூலம் மக்களிடம் ஆசையைத் துண்டி, அந்த நிறுவனம் மோசடியில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், தமிழககாவல் துறையின் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில், அந்த நிறுவனம்ஒரு லட்சத்து 9,255 பேரிடம், மொத்தம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்றுமோசடி செய்தது தெரியவந்தது. இந்தவழக்கு தொடர்பாக இதுவரை11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நிறுவனத்தின் நிறுவனர் ராஜசேகர், உஷா, மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதால், ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி முடக்கப்பட்டுள்ளது.

தகவல் கொடுத்தால் சன்மானம்: இந்நிலையில், நிறுவனர் சென்னை வில்லிவாக்கம் ராஜசேகர், நிர்வாகிகள் முகப்பேர் கிழக்கு உஷா, பூந்தமல்லி தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, செங்கல்பட்டு ருமேஷ்குமார் ஆகிய 5 பேரை தலைமறைவுக் குற்றவாளிகளாக பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர்.

மேலும், இவர்கள் குறித்து தகவல் இருப்பின் பொதுமக்கள் பொருளாதார குற்றப் பிரிவுபோலீஸுக்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தக்க தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும், தகவல் கொடுப்போரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்த தகவல்களை, "காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகம், காவலர் பயிற்சிக் கல்லூரி, அசோக் நகர், சென்னை 83, தொலைபேசி எண் 044 22504311, 044 22504332" என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம் என்றும் போலீஸார் அறிவித்து உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x