Published : 09 Apr 2023 12:31 PM
Last Updated : 09 Apr 2023 12:31 PM
திருப்பூர்: பல்லடம் அருகே காவலர் எனக் கூறி கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்ட நிலையில், கடத்திச் சென்றவரை பிடிக்க 7 தனிப்படை அமைத்து திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் ரோபாஸ்டன் (21). இவர், அந்த பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்துள்ளார். இந்நிலையில், காதலர்கள் இருவரும் உதகை செல்ல திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, கடந்த 6-ம் தேதி சாயல் குடியில் இருந்து உதகைக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.
மதுரை, ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக வந்து கொண்டிருந்தனர். பல்லடம் அருகே இவர்களின் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து, மற்றொரு இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். தான் காவலர் என்றும், உங்களை பார்த்தால் சந்தேகமாக உள்ளது என்றும், விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, ரோபாஸ்டனை இருசக்கர வாகனத்தில் சுமார் 1 கி.மீ. தூரம் வரை அழைத்துச் சென்று, பல்லடம் - திருச்சி சாலை மாதப்பூர் கருப்பசாமி கோயில் அருகே நிற்க வைத்துள்ளார். காதலியிடம் விசாரணை நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றார். காவலர் என்று கூறிய இளைஞர் மீது சந்தேகமடைந்த ரோபாஸ்டன், உடனடியாக காதலி இருக்கும் இடத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு காதலியை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர், காதலி கடத்தப்பட்டது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கடத்தப் பட்ட இளம்பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற இளைஞர், தன்னை மதுரையிலுள்ள வீட்டில் அடைத்து வைத்திருப்பதை காதலனிடம் இளம்பெண் கூறியுள்ளார்.
அங்கு சென்ற போலீஸார், இளம்பெண்ணை மீட்டனர். ஆனால், கடத்தலில் ஈடுபட்ட நபர் சிக்கவில்லை. இளைஞரை பிடிக்க 7 தனிப்படை அமைத்து மதுரை, திருப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் விசாரித்து வருவதாக பல்லடம் போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT