Published : 08 Apr 2023 07:31 AM
Last Updated : 08 Apr 2023 07:31 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ரூ.32.68 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றியது தொடர்பாக, பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் உள்ளிட்ட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீஸார், அரசு விருந்தினர் மாளிகையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பொதுப்பணித் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு செயற் பொறியாளரின் ஓய்வறை, அருகில் இருந்த ஜீப்பிலிருந்து கணக்கில் வராத ரூ.32,68,570-ஐ போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ராமநாதபுரம் பொதுப்பணித் துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பிரிவு) செயற் பொறியாளர் கண்ணன்(59), தொழில்நுட்ப வரைபட அலுவலர் குமரேசன், ஜீப் ஓட்டுநர் முனியசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று காரைக்குடியில் உள்ள கண்ணனின் வீடு, மதுரையில் உள்ள குமரேசனின் வீடு மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள முனியசாமியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் நகை, பணம், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து 3 பேரிடமும் விசாரணை நடத்
தப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT