Published : 07 Apr 2023 06:17 AM
Last Updated : 07 Apr 2023 06:17 AM

லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக தகவல் அனுப்பி பெண்ணிடம் ரூ.61 லட்சம் மோசடி - கேரள இளைஞர் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த லூர்துராஜ் மனைவி ஜான்சி(52). இவரது மகளின் செல்போன் எண்ணுக்கு லாட்டரியில் ரூ.25 லட்சம் பரிசு கிடைத்துள்ளதாக கடந்த 13.01.2022 அன்று வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் வந்துள்ளது. அதனை நம்பி ஜான்சி அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு ஆதார் கார்டு மற்றும் இதர விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

பரிசு பணத்தை பெறுவதற்காக பதிவு கட்டணம், ஜிஎஸ்டி, வருமானவரி என பல காரணங்களுக்காக மர்ம நபர் கூறியதை நம்பி பணத்தை அவரது வங்கி கணக்குக்கு ஜான்சி அனுப்பியுள்ளார். அதன்பிறகும் அந்த நபர் ஜான்சியிடம் ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் பரிசாக விழுந்துள்ளதாக கூறி ரூ.50 லட்சம் பெற்றுள்ளார்.

இவ்வாறு மொத்தம் ரூ.60,97,200 பணத்தை மர்ம நபர் பெற்றுக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக ஜான்சி, தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.

தூத்துக்குடி தலைமையிடத்து ஏடிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

தனிப்படை போலீஸார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு, ஜான்சியிடம் பணம் மோசடி செய்தது கேரள மாநிலம் எர்ணாகுளம் முண்டன்வெளி பகுதியைச் சேர்ந்த யேசுதாஸ் ஜான் மகன் சான்டலிஸிஸ் ஜான் (26) என்பதை கண்டறிந்தனர்.

இதையடுத்து போலீஸார் கேரளா சென்று அவரை கைது செய்து, அவரிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்து 4-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சான்டலிஸிஸ் ஜான் இதேபோல் மேலும் பல நபர்களை ஏமாற்றியுள்ளது தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x