Published : 01 Apr 2023 06:12 AM
Last Updated : 01 Apr 2023 06:12 AM

பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ் வீட்டில் ரூ.60 லட்சம் நகைகள் திருட்டு: அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார்

சென்னை: திரைப்படப் பின்னணிப் பாடகர்விஜய் யேசுதாஸ் வீட்டில் சுமார் ரூ.60லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடுபோனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.

புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் சிறந்த பின்னணிப் பாடகராகத் திகழ்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். இவர் பாடிய,‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..’ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும்,தனுஷ் கதாநாயகனாக நடித்த`மாரி' திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

சென்னை அபிராமபுரம், 3-வது தெருவில் உள்ள வீட்டில் விஜய் யேசுதாஸ், மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்,``கடந்த ஆண்டு டிசம்பரில் வீட்டின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த தங்க,வைர நகைகளைப் பார்த்தேன்.

நம்பர் பாஸ்வேர்டு லாக்கர்: பின்னர், கடந்த மாதம் நகைகளைஎடுக்கச் சென்றபோது அவற்றைக்காணவில்லை. இதன் மதிப்பு ரூ.60லட்சம் வரை இருக்கும். லாக்கரைதிறந்து யாரோ திருடிச் சென்றுள்ளனர். எனவே, எனது நகைகளை மீட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்திருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

விஜய் யேசுதாஸ் வீட்டில் இருக்கும் நகை லாக்கர், நம்பர் ‘பாஸ்வேர்டு’ போட்டு திறக்கும் அமைப்பைக் கொண்டது. எனவே, வெளியிலிருந்து வந்து யாரும் கைவரிசை காட்டியிருக்க வாய்ப்பு இல்லை. நன்கு அறிமுகமான, நெருங்கிப் பழகிய அல்லது பாஸ்வேர்டை தெரிந்தவர்கள்தான் திருடியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

இரு தனிப்படைகள் அமைப்பு: மேலும், வீட்டில் வேலை செய்த3 பேர் மீதும் போலீஸாரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. அவர்களிடம் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக நகை திருட்டுதொடர்பாக துப்பு துலக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனிப்படை போலீஸார் விஜய் யேசுதாஸ் வீட்டுக்கு நேரடியாகச் சென்று விசாரித்துள்ளனர். கைரேகை நிபுணர்களும் நிகழ்விடம்விரைந்து கிடைத்த ரேகைகளைச் சேகரித்தனர். விஜய் யேசுதாஸ் பணி நிமித்தமாக துபாயில் உள்ளதால் அவரையும் சென்னைக்குத்திரும்பி விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

2-வது சம்பவம்: அண்மையில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் சுமார் 200 பவுன் நகைகள் திருடு போயின. இந்த விவகாரத்தில் வீட்டின் பணிப்பெண், கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சினிமா பிரபலம் வீட்டில் நகை திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x