Published : 23 Mar 2023 04:49 PM
Last Updated : 23 Mar 2023 04:49 PM
திருவண்ணாமலை: வைப்பு மற்றும் காப்புத் தொகையை விடுவிக்க தலா ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்ற செயற்பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் வசிப்பவர் சி.நடராஜன். பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர். இவர், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பூதேரி புல்லவாக்கத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதி மற்றும் செய்யாறு அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, பிரசவ பிரிவு, பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டுவதற்கு கடந்த 2008-09-ம் ஆண்டு ஒப்பந்தம் பெற்றுள்ளார்.
ரூ.2,08,64,512 மதிப்பிலான பணிக்கு வைப்புத் தொகை மற்றும் காப்புத் தொகையாக ரூ.8,47,500, பொதுப்பணித் துறை வசம் கொடுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தபிறகு, வைப்புத் தொகை மற்றும் காப்புத் தொகையை பெறுவதற்கு தடையில்லா சான்று கேட்டு செய்யாறு பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மாரியப்பா மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்செல்வி ஆகியோரை அணுகி உள்ளார். அப்போது இருவரும் தலா ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர். மேலும் பெயர் குறிப்பிடாத ரூ.1 லட்சத்துக்கான காசோலை கேட்டு செயற்பொறியாளர் மாரியப்பா நெருக்கடி கொடுத்துள்ளார்.
இது குறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்பந்ததாரர் நடராஜன் புகார் கொடுத்துள்ளார். அவர்களது அறிவுரையின் பேரில், தலா ரூ.50 ஆயிரம் லஞ்ச பணத்தை கடந்த 25-01-2012-ம் தேதி கொடுத்த போது, அதனை பெற்று கொண்ட செயற்பொறியாளர் மாரியப்பா, தொழில் நுட்ப உதவியாளர் தமிழ்செல்வி, இவர்களுக்கு உதவியாக இருந்த மற்றொரு ஒப்பந்ததாரர் குணசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை, திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிந்து இன்று (23-ம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்டது. செயற்பொறியாளர் மாரியப்பா, தொழில்நுட்ப உதவியாளர் தமிழ்செல்வி ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஈஸ்வரமூர்த்தி தீர்ப்பு வழங்கி உள்ளார். ஒப்பந்ததாரர் குணசேகரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT