Published : 23 Mar 2023 04:17 AM
Last Updated : 23 Mar 2023 04:17 AM
பல்லாவரம்: பல்லாவரம் பகுதியில் சட்ட விரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ் நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக கேரளாவைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்ட மர்ம நபர் குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பல்லாவரம் பகுதியில் வெளிநாட்டு இணையவழி செல்போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி உள்ளூர் சிம் கார்டுகள் மூலமாக இந்தியாவுக்கு பரிமாற்றம் செய்யப்படுவதாக தாம்பரம் காவல் ஆணையரக அலுவலகத்துக்கு புகார் வந்தது.இதையடுத்து ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்படி தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அதில்,டெலிகம்யூனிகேஷன் துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சட்டவிரோத தொலைதொடர்பு நடைபெறுவது தெரியவந்தது.
தொடர்ந்து, பல்லாவரத்தில் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த பகாத் முகமது என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரும் சர்வதேச போன் அழைப்புகளை, டெலி கம்யூனிகேஷன் துறைக்கு தெரியாமலேயே இன்டர்நெட் அழைப்புகளாக பெற்று சிம் பாக்ஸ் அமைத்து லோக்கல் சிம் கார்டுகளை உபயோகப்படுத்தி சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ் நடத்தி வந்தது தெரியவந்தது.
அதன்மூலம், அதிக லாபம் சம்பாதித்து வந்ததும், அவற்றை, கேரள மாநிலத்தைச் சேர்ந்த சாஹல் என்பவர் ஏற்பாடு செய்து கொடுத்து நடத்துமாறு கூறியதும் தெரியவந்தது. இதையடுத்து, பெரும்பாக்கத்தில் தங்கியிருந்த சாஹலை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ஜூப்பர் என்பவர் மூலம், டெலிகிராமில் பேசிய நபர், வெளிநாட்டு அழைப்புகளை இன்டர்நெட் மூலமாக பெற்று, லோக்கல் சிம் கார்டுகள் மூலமாக உள்ளூர் போன் அழைப்புகளாக மாற்றி கொடுக்குமாறு வேலை கொடுத்ததும், அதன் அடிப்படையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், டெலிகிராமில் பேசிய நபர் யார் எந்த நாடு என்ற விவரங்கள் எதுவும் சாஹலுக்கு தெரியாது. மாதந்தோறும், வேலைக்கான ஊதியம் சாஹலுக்கு வங்கி கணக்கில் வந்துவிடும். டெலிகிராமில் பேசிய நபரை, அரை மணி நேரம் கழித்து, அதே எண்ணில் தொடர்பு கொண்டால் அந்த எண் டி- ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கும். அதனால், இந்த சட்டவிரோத செயலுக்கு மூளையாக செயல்பட்ட நபர் யார், எந்த நாடு என்பது குறித்து, தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேநேரத்தில் கைது செய்யப்பட்ட சாஹல், பகாத் முகமது ஆகியஇருவரை நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 1,235 சிம் கார்டுகள், 3 மோடம், 15 ரவுட்டர்கள் உள்ளிட்ட பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதேபோல் தாழம்பூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ் ஒன்றையும் கண்டுபிடித்து, சிம் கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT