Published : 22 Mar 2023 06:17 AM
Last Updated : 22 Mar 2023 06:17 AM

ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி கைதான பாதிரியார் மீது மேலும் பல பெண்கள் புகார்: காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ

நாகர்கோவில்: பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ பரவியதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் பல பெண்கள் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்த குடயால்விளையைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ(29). பாதிரியாரான இவர் பினாங்காலை கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின.

இந்நிலையில் பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர், பாதிரியார் தன்னிடம் செல்போனில் ஆபாசமாக பேசியும், வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்தும் தொல்லை கொடுப்பதாக நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி பாதிரியார் தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் மற்றும் லேப் டாப்பை கைப்பற்றி, அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நேற்று முன்தினம் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்று ஏடிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, போலீஸாரின் பல கேள்விகளுக்கு முதலில் பாதிரியார் மவுனம் சாதித்துள்ளார்.

அதன் பிறகு சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களையும், பெண்களின் புகைப்படங்களையும்தான் வெளியிடவில்லை என்றும், எந்தவொரு பெண்ணையும் மிரட்டவோ, ஏமாற்றவோ செய்யவில்லை என்றும் திட்டமிட்டு தன்னை சிக்க வைப்பதற்காக தனது தனிப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர் என்றும் கூறியள்ளார்.

காதலுக்கு பெற்றோர் மறுப்பு: மேலும் வீடியோவில் தன்னுடன் இருக்கும் பெண் ஒருவரை மனப்பூர்வமாக காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்யும் பொருட்டு பாதிரியார் பணியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாகவும், அதற்கு தனது பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றும், இதனால் அந்த பெண்ணை பிரிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தாகவும், அதன் பிறகு தங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீஸாரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாதிரியார் மீது மேலும் பல பெண்கள் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இவ்வழக்கில் தாமதமின்றி பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என பெண்கள் அமைப்பினர் நேற்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் என சைபர் கிரைம் போலீஸார் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x