Last Updated : 17 Mar, 2023 06:13 PM

 

Published : 17 Mar 2023 06:13 PM
Last Updated : 17 Mar 2023 06:13 PM

சேலம் மத்திய சிறையில் காவல் துணை ஆணையர் தலைமையில் அதிரடி சோதனை: செல்போன், கஞ்சா கைப்பற்றி விசாரணை

சேலம் மத்திய சிறைச்சாலையில் சோதனையை முடித்து விட்டு வெளியே வந்த மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலீஸார்.

சேலம்: சேலம் மத்திய சிறையில் மாநகரக் காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலீஸார் நடத்திய சோதனையில், செல்போன், சார்ஜர், கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மத்திய சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டர் தடுப்பு காவல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறை கைதிகள் மூன்று பேர் செல்போனை பயன்படுத்தியது தெரிய வந்தது. இந்நிலையில், செல்போனை சிறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின் பேரில், சேலம் மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலீஸார் இன்று காலை மத்திய சிறைச்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மாநகர போலீஸார் சிறையில் உள்ள அனைத்து பிளாக்குகளில் உள்ள சிறை கொட்டறைகளில் நடத்திய சோதனையில், கைதிகளின் அறையில் செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் மற்றும் செல்போன் சார்ஜர் உள்ளிட்டவை பதுக்கி வைத்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மாநகர போலீஸார் செல்போன், சார்ஜர், கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

சிறை வளாகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் யார் மூலம், எப்படி வந்தது என்பது குறித்து சிறைக் காவலர்களிடம், மாநகர காவல் துணை ஆணையர் மாடசாமி மற்றும் சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைக்குள் வரும் கைதிகளை முழு அளவில் சோதனையிட்டே, கொட்டறைகளில் அடைக்கப்படுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், சிறைக்குள் சட்டத்துக்கு புறம்பாக கஞ்சா, செல்போன் உள்ளிட்டை கொண்டு வரப்பட்டதின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து தொடர்ந்து, காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon