Published : 06 Mar 2023 08:05 PM
Last Updated : 06 Mar 2023 08:05 PM
தஞ்சாவூர்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீஸார் இன்று (6-ம் தேதி) பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு தடை செய்துள்ள கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் சரக டிஐஜி ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மேற்பார்வையில், ஏடிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில், உதவி ஆய்வாளர் அடைக்கல எப்.ஆரோக்கியசாமி டேவிட், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என்.கந்தசாமி, எஸ்.கண்ணன், தலைமை காவலர் பி.உமாசங்கர், காவலர்கள் கே.சுந்தர்ராமன், டி.ஆனந்தராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் தஞ்சாவூர் சரகத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருபவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் பகுதிக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தஞ்சாவூர் நகர் மற்றும் எல்லைப்பகுதியில் தனிப்படை போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூருக்கு லாரி மூலம் கஞ்சா கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த ஹல்க் கார்த்தி (33), தென்காசியை சேர்ந்த ரகுநாதன் (27) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்புடைய 285 கிலோ கஞ்சா பொட்டலங்களை தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் கஞ்சா கடத்தலில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளதாகவும், கஞ்சா கடத்தலுக்கு உதவியாக இருந்த நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து லாரி மூலம் கஞ்சா கடத்தி வந்த நபர்களை கைது செய்த தனிபடை போலீஸாருக்கு டிஐஜி ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் ஆகியோர் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT