Published : 05 Mar 2023 04:13 AM
Last Updated : 05 Mar 2023 04:13 AM

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் 4 பேர் கைது - 2 பேரை பிடிக்க போலீஸார் தீவிரம்

கஜேந்திரன், திவாகர்

சென்னை: பெரம்பூர் நகைக்கடைக் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெரம்பூரில் உள்ள நகைக்கடையில் பிப். 9-ம் தேதி 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக, 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனிப்படை போலீஸார் முகாமிட்டு, தகவல்களை சேகரித்து வந்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், 2 பேர் நகைகளைப் பங்கு பிரிப்பது தொடர்பாக மோதலில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் கங்காதரன், ஸ்டீபன் என்பதும், பல கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டதும் தெரியவந்தது.

அவர்களிடமிருந்த இரண்டரை கிலோ நகைகள் குறித்து விசாரித்த போது, தங்கள் கூட்டாளிகளுடன் பெரம்பூர் நகைக் கடையில் கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்தபோலீஸார், நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து தமிழக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, கர்நாடகாவில் முகாமிட்டிருந்த தமிழக தனிப்படை போலீஸார், கங்காதரன், ஸ்டீபன் ஆகியோரது கூட்டாளிகள் கஜேந்திரன், திவாகர் ஆகியோரைக் கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

நகைகளை மீட்க நடவடிக்கை: விசாரணையில், கங்காதரன், ஸ்டீபன், கஜேந்திரன், திவாகர், அருண், கவுதம் ஆகிய 6 பேர் சேர்ந்து, கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதற்கு கங்காதரன் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளார். இதையடுத்து, தலைமறைவாக உள்ள அருண், கவுதம் ஆகியோரைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கங்காதரன், ஸ்டீபன் ஆகியோரை தமிழகம் அழைத்து வந்து விசாரிக்கவும், பெங்களூரு போலீஸாரிடம் உள்ள இரண்டரை கிலோ நகைகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து வடசென்னை கூடுதல்காவல் ஆணையர் அன்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை தொடர்பான விசாரணையில், பெங்களூருவைச் சேர்ந்த 6 பேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. கங்காதரன், கஜேந்திரன், திவாகர் ஆகியோரைத் தேடி தனிப்படை போலீஸார் பெங்களூரு சென்றனர்.

அங்கு கஜேந்திரன், திவாகர் ஆகியோரைக் கைது செய்தோம். முன்னதாக, கங்காதரன், ஸ்டீபன் ஆகியோர் பெங்களூரு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது, கஜேந்திரன், திவாகரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தியுள்ளோம். மேலும், தலைமறைவாக உள்ள அருண், கவுதம் ஆகியோரைத் தேடி வருகிறோம்.

இவர்களில் திவாகரைத் தவிர, மற்ற அனைவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனைவரையும் கைது செய்த பின்னர் தான், இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாராவது ஈடுபட்டுள்ளார்களா என்பது தெரியவரும். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தையும் விரைவில்மீட்போம். இந்த வழக்கு தொடர்பாகமுழு ஒத்துழைப்பு வழங்குவதாக கர்நாடகா போலீஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

5 நாள் போலீஸ் காவல்: நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கஜேந்திரன், திவாகர் ஆகிய 2 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x