Last Updated : 03 Mar, 2023 04:31 PM

1  

Published : 03 Mar 2023 04:31 PM
Last Updated : 03 Mar 2023 04:31 PM

குற்றவாளிகளுக்கு போலீஸார் உதவினால் நடவடிக்கை: புதுச்சேரி ஆட்சியர் எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆட்சியர் மணிகண்டன் பேசுகையில், "தமிழகம், ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுடன் இணைப்பில் உள்ளதால் புதுச்சேரி மாநிலம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். புதுச்சேரி எப்போதும் அமைதியாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக சமூக விரோத குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது.

காவல் துறையில் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோத குற்ற செயல்கள் குறையவில்லை. காவல் துறை எஸ்பிக்கள் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும். எந்த ஒரு ரவுடிகளுக்கும் புதுச்சேரியில் இடம் இருக்கக் கூடாது. ரவுடிகள் இல்லா புதுச்சேரியை உருவாக்க வேண்டும். பள்ளி சிறுவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகப்படியான புகார்கள் வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

குற்றம் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு போலீஸார் உடந்தையாக செயல்பட்டு எளிதில் வெளியே வரும் அளவுக்கு முதல் தகவல் அறிக்கையை ( எப்ஐஆர் ) திருத்தி எழுதுதல், அவர்கள் ஜாமினில் வெளியே வருவதற்கு உதவுதல், ரவுடிகளுடன் கூட்டு சேர்ந்து அவர்கள் செய்யும் குற்ற செயல்களை கண்டும் காணாமல் இருத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க நானே காவல் துறை தலைவருக்கு பரிந்துரை செய்வேன். எனவே, எஸ்பிக்கள் அனைவரும் காவல் நிலைய அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். குற்றவாளிகளின் குற்றத்துக்கு ஏற்ப அவர்களின் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பேனர் அகற்றம் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதுகாப்பு கேட்டால், தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக தனியாக கூட்டம் நடத்தப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x