Published : 28 Feb 2023 07:11 PM
Last Updated : 28 Feb 2023 07:11 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் கிராமம், நித்தியகல்யாணி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் 3 சிலைகளைத் திருடிய 9 பேருக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் கிராமத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான நித்திய கல்யாணி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நடராஜர், சிவகாமி, தேவி ஆகிய 3 உலோக சிலைகள் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி திருட்டுப் போனது என அக்கோயிலின் பூசாரி அய்யப்பன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தார்.
இதன் பேரில், காவல் ஆய்வாளர் ஏ.சமீம்பானு, உதவி ஆய்வாளர் ஆர்.ராஜேஷ். சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜசேகரன் மற்றும் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிலைகளை திருடிய செல்லதுரை, கணேசன், மாரியப்பன், முத்து (என்கிற) வேம்படிமுத்து, ராமகிருஷ்ணன் (எ) தாஸ், சண்முகவேலாயுதம், முருகன், பாலமுருகன், சங்கர், தினகரன். சதிஷ்குமார் ஆகிய 11 பேரை கைது செய்து அவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட 3 சிலைகள் மீட்கப்பட்டது.
இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின்போது முருகன் மற்றும் தினகரன் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, ”செல்லத்துரை, கணேசன், மாரியப்பன், முத்து (என்கிற) வேம்படிமுத்து, ராமகிருஷ்ணன் (என்கிற) தாஸ், சண்முகவேலாயுதம் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் 3 மாதம் கடுங்காவல் தண்டனையும், பாலமுருகன், சங்கர், சதீஷ்குமார் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் 3 மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்” என்று தீர்ப்பளித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாரை, காவல் துறை டிஜிபி சி.சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT