Published : 28 Feb 2023 04:11 PM
Last Updated : 28 Feb 2023 04:11 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் 7 நாள் போலீஸ் காவல் முடிந்து ஹரியாணா கொள்ளையர்கள் 2 பேரும், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வேலூர் மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள 4 ஏடிஎம் மையங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டன. காஸ் வெல்டிங் இயந்திரம் மூலம், 4 ஏடிஎம் இயந்திரங்களின் குறிப்பிட்ட பகுதியை பெயர்த்தெடுத்து, ஹரியாணா மாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். திருவண்ணாமலையில் கொள்ளையடித்த பணத்துடன் கர்நாடக மாநிலம் கோலார் சென்ற கொள்ளையர்கள், பின்னர் அங்கிருந்து ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தப்பித்து சென்றுள்ளனர். இவர்களில் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் விமானம் மூலமாக பெங்களூரில் இருந்து ஹரியாணா சென்றனர்.
இதையறிந்து, ஹரியாணா மாநிலம் சென்ற தனிப்படையினர், முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரை கடந்த பிப்ரவரி 17ம் தேதி கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரையும், 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து கடந்த 22-ம் தேதி முதல் தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
ஏடிஎம் மைங்களுக்கு கொள்ளையர்களை அழைத்து சென்று, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து செய்து காண்பிக்க வைத்து, கேமராவில் பதிவு செய்தனர். இவை அனைத்தும், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, 7 நாள் விசாரணை முடிந்து, திருவண்ணாமலை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரை இன்று (28-ம் தேதி) ஆஜர்ப்படுத்தினர்.
இருவரது முகங்களும் கருப்பு துணியால் மூடப்பட்டிருந்தது. இருவரையும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ் திரேட் கவியரசன் உத்தரவிட்டார். அதன்பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வேலூர் மத்திய சிறையில் இருவரையும் மீண்டும் அடைத்தனர்.
இதற்கிடையில், போளூர் மற்றும் கலசப்பாக்கத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்குகள் தொடர்பாக முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போளூர் உட்கோட்ட தனிப்படையினரும், கோலாரில் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி கைது செய்யப்பட்ட குதரத் பாஷா மற்றும் அப்சர் உசேன் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருவண்ணாமலை உட்கோட்ட தனிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“நாங்கள் இல்லை, தெரியாது” - திருவண்ணாமலை உட்கோட்ட காவல்துறையினர் 7 நாட்கள் நடத்திய விசாரணையில், முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகியோர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. காவல் துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு, ‘நாங்கள் இல்லை, தெரியாது‘ என்ற பதிலை மட்டுமே கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்கெனவே கிடைத்த தகவலின்பேரில் ‘நிஜாம்’ என்ற நபரின் பெயரை குறிப்பிடும்போது, அவர்களது செயலில் மாற்றம் இருந்துள்ளன. இதையடுத்து, நிஜாம் குறித்த அவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நிஜாம் யார் என்று தெரியாது என தொடர்ந்து கூறியுள்ளனர்.
மூளையாக செயல்பட்ட நிஜாம்: இது குறித்து திருவண்ணாமலை தனிப்படையினர் கூறும்போது, “ஏடிஎம் கொள்ளைக்கு நிஜாம் என்ற பெயர் உள்ளவர் மூளையாக செயல்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது வழிகாட்டுதலின் பேரில், கொள்ளை நடைபெற்றுள்ளது. கொள்ளையடித்த பணமும், அவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கோலாரில் தங்கியிருந்ததாக கூறப்படும் நிஜாம், தலை மறைவாக உள்ளார். அவரை பிடிக்க, கோலார் பகுதியில் ஒரு தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். நிஜாம் பிடிப்பட்டால், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் காணலாம். இதற்கிடையில், ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட ஹரியாணா கொள்ளையர்களை பிடிக்க, அம்மாநிலத்துக்கு மற்றொரு தனிப்படையினர் சென்றுள்ளனர்.
கண்டெய்னர் லாரி மூலமாக ஹரியாணா மாநிலத்துக்கு கொள்ளையடிக்கப்பட்ட பணம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முகமது ஆரிப், ஆசாத் ஆகியோரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்த நிலையில, மீதமுள்ள ரூ.70 லட்சத்தை மீட்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT