Published : 25 Feb 2023 06:14 AM
Last Updated : 25 Feb 2023 06:14 AM
சேலம்: செல்போனில் தொடர்புகொண்டு வங்கி விவரத்தை பெற்று ரூ.2.95 லட்சத்தை மோசடி செய்த நபரிடமிருந்து சேலம் சைபர் க்ரைம் போலீஸார் பணத்தை மீட்டனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மாசிலாபாளையத்தைச் சேர்ந்த யோகராஜ் (64) என்பவரிடம் கடந்த 21-ம் தேதி, மர்மநபர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஏடிஎம் கார்டு புதுப்பிக்க வேண்டும் என்றும், அதற்காக வங்கி விவரம், ஓடிபி எண்களை கூறுமாறும் கேட்டுள்ளார்.
இதனை நம்பிய யோகராஜ் அவரது செல்போனுக்கு வந்த ஓடிபி விவரத்தை மர்ம நபரிடம் கூறியுள்ளார். பின்னர் உடனடியாக யோகராஜ் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்தை மர்ம நபர் எடுத்துள்ளார். இதுகுறித்து வந்த குறுந்தகவலைப் பார்த்த யோகராஜ் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் மாவட்ட எஸ்பி சிவக்குமாரிடம் புகார் மனு அளித்தார். இதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மர்மநபரின் வங்கிக் கணக்கை முடக்கி அதில் இருந்த ரூ.2 லட்சத்து 95 ஆயிரத்தை சைபர் க்ரைம் போலீஸார் மீட்டனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி சிவக்குமார் கூறும்போது, ‘அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை நம்பி தங்களது வங்கி விவரம் மற்றும் ஓடிபி- விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
இதுபோல யாரேனும் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் க்ரைம் அவசர உதவி எண் 1930-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உடனே புகார் பதிவு செய்தால் இழந்த பணத்தை மீட்டுத்தர இயலும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT