Published : 21 Feb 2023 09:23 PM
Last Updated : 21 Feb 2023 09:23 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.73 லட்சத்தில் ரூ.70 லட்சத்தை மீட்பதில் தனிப்படைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதனிடையே, ஹரியாணாவில் இருந்து திருவண்ணாமலைக்கு தனிப்படை திரும்பியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி அதிகாலை 4 ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம், தமிழக காவல் துறையை உலுக்கியது. காஸ் வெல்டிங் மூலமாக ஏடிஎம் இயந்திரங்களின் குறிப்பிட்ட பகுதியை பெயர்த்து ரூ.73 லட்சத்தை, ஹரியாணா மாநிலம் மேவாத் பகுதி கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இவர்களில் முகமது ஆரிப் மற்றும் ஆசாத் ஆகிய 2 கொள்ளையர்களை, ஹரியாணாவில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளது காவல் துறை.
மேலும் 3 பேர் அடையாளம் தெரியவந்தததும், அவர்களை பிடிக்கும் முயற்சியில் தனிப்படையினர் ஈடுபட்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள், ஹரியாணாவில் ஜீப்புடன் எரித்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் 3 கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் தனிப்படைக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால், எஸ்.பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர், தமிழகத்துக்கு திரும்பி விட்டனர். மூவரில் ஒருவர், கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டுள்ளார். பதற்றம் தணிந்ததும், ஹரியாணாவுக்கு மீண்டும் பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், தனிப்படையில் இடம்பெற்றிருந்த எஸ்பிக்கள், தங்களது வழக்கமான பணிக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், ஹரியாணா கொள்ளையர்கள் பிடிப்பட்டாலும், அவர்கள் கொள்ளையடித்து சென்ற ரூ.70 லட்சத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 கொள்ளையர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தனிப்படையினர் தெரிவித்தாலும், காட்சிப்படுத்தாமல் இருப்பதால் சந்தேகம் வலுக்கிறது.
திருவண்ணாமலையில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கார் மூலமாக கர்நாடக மாநிலம் கோலார் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கண்டெய்னர் லாரி மூலமாக, ஹரியாணா மாநிலத்துக்கு முக்கிய நபர்கள் கொண்டு சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் வசிக்கும் பகுதியை சென்றடைந்த பணத்தை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டதாக கூறப்படும் 3 கொள்ளையர்களை பிடிக்க முடியுமா என்ற சூழல் உள்ளது. இதனால், கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளன. கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் உட்பட அனைத்து நிலைகளில் உதவியர்களுக்கு சரியாக பங்கீடு செய்து பணம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. கொள்ளை நடைபெற்று 10 நாட்கள் கடந்துவிட்டது. நாட்கள் அதிகரிக்க, அதிகரிக்க ஏடிஎம்-களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்பது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என தனிப்படையினர் கருதுகின்றனர்.
கோலாரில் மேலும் 2 பேர் கைது: இந்தக் கொள்ளை வழக்கில் மேலும் 2 பேரை தனிப்படை போலீசார் இன்று (பிப்.21) கைது செய்துள்ளனர். ஏடிஎம் கொள்ளை கும்பலுக்கு உதவி செய்ததாக கர்நாடக மாநிலம் கோலாரில் 2 பேரை கைது செய்து, திருவண்ணாமலை நகர காவல் நிலையத்துக்கு தனிப்படையினர் அழைத்து வந்தனர். கர்நாடக மாநிலம் கோலார் பகுதி, மகாலட்சுமி லே அவுட் பீர்பாஷா மகன் குதரத் பாஷா (43), அசாம் மாநிலம், லைலா பைபாஸ் சாலை, லாலாப்பூர் பயாசுதீன் மகன் அப்சர் உசேன் (26) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேரின் முகங்களும் கருப்பு துணியால் மூடப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, மாஜிஸ்திரேட் கவியரசன் முன்னிலையில் இருவரையும் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், மார்ச் 7-ம் தேதி வரை, இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், பலத்த பாதுகாப்புடன், வேலூர் மத்திய சிறையில் 2 பேரும் அடைக்கப்பட்டனர். பணம் பரிமாற்றம் செய்வதற்காக குதரத் பாஷாவும் மற்றும் கோலாரில் உள்ள விடுதியில் தங்க வைப்பதற்காக அப்சர் உசேனும் உதவி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment