Published : 21 Feb 2023 07:05 AM
Last Updated : 21 Feb 2023 07:05 AM
சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.20 ஆயிரம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற முன்னாள் அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் அலுவலராக பணிபுரிந்து வந்தமோகனகிருஷ்ணன் என்பவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்திருந்தார். அதில் ``உயர் நீதிமன்றத்தில் துப்புரவுப் பணியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னிடம் கடந்த 2002-ம் ஆண்டு ரூ.20 ஆயிரத்தை மோகனகிருஷ்ணன் பெற்றார்.
ஆனால், கூறியபடி வேலை வாங்கித்தராமல் இழுத்தடிப்பு செய்தார். வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என புகாரில் கோரியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மோகனகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், மோகனகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதற்கிடையே, மோகனகிருஷ்ணன் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவில், ``சாட்சிகள் மற்றும் ஆவணங்களை சரியாக ஆராயாமல் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்ற முன்னாள் அலுவலரான மோகனகிருஷ்ணன் வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டதற்கான ஆதாரங்களை விசாரணை நீதிமன்றம்கருத்தில் கொள்ளவில்லை'' என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கஸ்தூரி ரவிச்சந்திரன் ஆஜராகி, ‘‘குற்றம் சாட்டப்பட்ட மோகனகிருஷ்ணன் மீது ஏற்கெனவே இதுபோல 2 புகார்கள் உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம்அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரிலேயே அவர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்’’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன், மோசடியில் ஈடுபட்ட மோகனகிருஷ்ணனுக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT