Published : 21 Feb 2023 03:10 AM
Last Updated : 21 Feb 2023 03:10 AM
சேலம்: சேலத்தில் குரும்பப்பட்டி காப்புக்காட்டுக்குள் நுழைந்து வன விலங்கை வேட்டையாட முயன்ற இருவரை கைது செய்த, வனத்துறையினர் அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்ட வன அலுவலர் சசாங் காய்ஷாப் ரவி உத்தரவின் பேரில், வனசரக அலுவலர் முரளிதரன் தலைமையிலான வனவர் பழனிவேல், வனக்காப்பாளர்கள் அசோக்குமார், அருண்குமார், செல்வசேகர் குழுவினர், குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி ஈடுபட்டனர். அப்போது, காப்பு காட்டில் இரண்டு பேர் வேட்டையாட பதுங்கி இருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்ற நிலையில் வனத்துறை அதிகாரிகள் இருவரையும் விரட்டி, சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.
வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் அந்த இருவர் சங்கர் (29), பச்சியப்பன் (51) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கன்னி வலைகளை பயன்படுத்தி புள்ளிமான், முயல், காட்டுப்பூனை போன்ற வனவிலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கைது செய்த இருவரையும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 6-ன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT