Published : 18 Feb 2023 04:17 PM
Last Updated : 18 Feb 2023 04:17 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்ட ஹரியாணா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த இருவரும், குற்றவியல் நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் வரும் மார்ச் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து, இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள நான்கு ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி கொள்ளை நடைபெற்றது. காஸ் வெல்டிங் மூலமாக ஏடிஎம் இயந்திரங்களின் குறிப்பிட்ட பகுதியை பெயர்ந்து, அதிலிருந்த ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் 3 ஏடிஎம் இயந்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.இது குறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் தனித்தனியே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையர்கள் தேடப்பட்டு வந்தனர். இதில், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள ஹோட்டலில் கொள்ள கும்பல் தங்கி, ஏடிஎம் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, ஹரியாணா மாநிலம் மேவாத் என அழைக்கப்படும் பகுதியைச் சேர்ந்த கும்பல் என வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பெங்களூருவில் இருந்து ஹரியாணாவுக்கு விமானம் மூலம் தப்பித்து சென்ற கொள்ளை கும்பலை பிடிக்க, திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர், ஹரியாணாவுக்கு விரைந்தனர். அம்மாநிலத்தில் முகாமிட்டிருந்த தனிப்படையினர், உள்ளூர் காவல்துறை உதவியுடன் நூக் மாவட்டம் சோனாரி கிராமத்தில் வசிக்கும் முகமது ஆரிப்(35), புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தில் வசிக்கும் ஆசாத்(37) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும், விமானம் மூலமாக சென்னைக்கு நேற்று (17-ம் தேதி) இரவு அழைத்து வந்தனர். பின்னர் அங்கிருந்து, திருவண்ணாமலைக்கு காவல்துறையின் வாகனத்தில் இன்று (18-ம் தேதி) அதிகாலை கொண்டு வந்தனர்.
திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த 2 கொள்ளையர்களிடம், உள்ளூர் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். பின்னர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதன்பிறகு, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் இரண்டு பேரையும் இன்று(18-ம் தேதி) ஆஜர்ப்படுத்தினர். இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் மார்ச் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் கவியரசன் உத்தரவிட்டார்.
அப்போது முகமது ஆரிப், ஆசாத் ஆகிய 2 பேரையும் ஆஜர்ப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புடன், வேலூர் மத்திய சிறையில் 2 பேரும் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரும், ஏடிஎம் கொள்ளைக்கும், தங்களுக்கும் தொடர்பும் இல்லை என தனிப்படையிடம் தெரிவித்துள்ளனர். இதையே அவர்கள், நீதிமன்றத்திலும் தெரிவித்தனர்.
காவலில் எடுக்க திட்டம்: இதற்கிடையில், ஹரியாணா கொள்ளையர்களை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கர்நாடக மாநிலத்தில் 2 பேர் மற்றும் குஜராத் மாநிலத்தில் 6 பேர் என பிடிப்பட்டுள்ள 8 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது. கொள்ளை சம்பவத்தில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய தனிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹரியாணா மாநிலத்தில் கைதான 2 பேரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்ததாக தனிப்படை தெரிவித்துள்ளது. எஞ்சிய ரூ.70 லட்சத்தை மீட்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT