Published : 17 Feb 2023 09:50 PM
Last Updated : 17 Feb 2023 09:50 PM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள நான்கு ஏடிஎம் மையங்களில் கடந்த 12-ம் தேதி அதிகாலை ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்குகளில் குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி கண்ணன் மேற்பார்வையில் டிஐஜி முத்துசாமி தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ஹரியாணா மாநிலம் மேவாத் கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. இவர்கள், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தங்கியிருந்து கொள்ளையை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ஹரியாணா மாநிலத்தில், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் முகாமிட்டு, கொள்ளையர்களை தேடி வந்தனர். இதில், கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய நபர்களான ஹரியாணா மாநிலம் நூ (Nuh) மாவட்டம் சோனாரி கிராமம் முகமது இலியாஸ் மகன் முகமது ஆரிப்(35) மற்றும் ஹரியாணா மாநிலம் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமம் ஷரூப்கானி மகன் ஆசாத்(37) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களை, ஹரியாணா மாநிலத்தில் இருந்து விமானம் மூலமாக இன்று நள்ளிரவு, சென்னைக்கு அழைத்து வர உள்ளனர். கொள்ளையர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 1.19 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.20 மணிக்குள் 4 ஏ.டி.எம் மையங்களில் காஸ் வெல்டிங் மூலம் இயந்திரங்களை உடைத்து ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. டாடா சுமோ காரில் வந்த முகமூடி கொள்ளை கும்பல், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை, சித்தூர், பலமநேரி வழியாக கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் சென்றது தெரியவந்திருந்தது.
மேலும், கொள்ளையர்களை பிடிக்க டிஎஸ்பிக்கள் தலைமையில் சென்ற தனிப்படையினர் ஹைதராபாத், நாக்பூர், அஹ்மதாபாத், ஹரியானாவில் துப்பாக்கிகளுடன் முகாமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT