Last Updated : 17 Feb, 2023 08:17 PM

 

Published : 17 Feb 2023 08:17 PM
Last Updated : 17 Feb 2023 08:17 PM

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி: சேலம் நிறுவனம் மீது வழக்குப் பதிவு

சேலம்: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சேலம் நிறுவனத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.

சேலம் 5 ரோடு அருகில் உள்ள தனியார் அடுக்குமாடியில் யூரோ நெக்ஸஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை இன்று காலை 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சூரமங்கலம் போலீஸார், தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, இளைஞர்கள் போலீஸாரிடம் கூறும்போது, ''இந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்ததை நம்பி, திருநெல்வேலி, சேலம், மதுரை, கள்ளக்குறிச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அணுகினோம். இந்த நிறுவனத்தினர் கேமன் தீவுகளில் உள்ள ஓட்டல்களில் எலக்ட்ரிசன் உள்ளிட்ட பணிகளுக்கு வேலைக்கு ஆட்களை சேர்த்து விடுவதாக கூறினர். ஒவ்வொருவரிடமும் முன்பணமாக தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.7 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர்.

வேலை வாங்கி கொடுக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில், நேற்று பணம் திரும்ப வழங்குவதாக குறுந்தகவல் வந்தது. இதனை நம்பி பல்வேறு மாவட்டங்களில் இருந்தவர்களும் வந்து பார்த்தபோது, நிறுவனம் பூட்டப்பட்டுள்ளது. எனவே, இந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து, பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட உரிமையாளர்களை கைது செய்து, பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும்” என்று கூறினர். சூரமங்கலம் போலீஸார் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமாதானம் செய்து, மோசடியில் ஈடுபட்ட நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x