Published : 15 Feb 2023 05:56 PM
Last Updated : 15 Feb 2023 05:56 PM
கிருஷ்ணகிரி: வேலம்பட்டியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ராணுவ வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (31). இவரது சகோதரர் பிரபு (28). இவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த நாகரசம்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு திமுக கவுன்சிலர் சின்னசாமி (58). இவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி (27), குணாநிதி (19), ராஜபாண்டியன் (30). இதில் குருசூர்யமூர்த்தி, சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி பிரபாகரன் பொது குடிநீர் தொட்டி அருகே துணிகளை துவைத்து கொண்டிருந்தார். இதுகுறித்து சின்னசாமி கேட்ட போது, அங்கு வந்த பிரபாகரனின் தாயாருக்கும், சின்னசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இதுகுறித்து மீண்டும் அன்றைய தினம் மாலை சின்னசாமி, அவரது மகன்கள் குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் மற்றும் சிலர் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆத்திரமடைந்த சின்னசாமி தரப்பினர், தாங்கள் வைத்திருந்த கத்தி, உருட்டைக்கட்டை, இரும்புக்கம்பியால் பிரபாகரன், அவரது தம்பி பிரபு, தந்தை மாதையன் ஆகியோரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில், நாகரசம்பட்டி போலீஸார், சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன் (32), மாதையன் (60), புலிபாண்டி (24), வேடியப்பன் (55), காளியப்பன் (40) உள்ளிட்ட 9 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில், குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், வேடியப்பன் ஆகிய 6 பேரை போலீஸார் கடந்த 9-ம் தேதி கைது செய்தனர். சின்னசாமி படுகாயம் அடைந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதே போல் சின்னசாமி கொடுத்த புகாரின் பேரில், ராணுவ வீரர்கள் பிரபாகரன், பிரபு, மற்றும் 18 வயது மாணவர், முத்து (22), மாதையன் (60) ஆகிய 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு, நேற்று இரவு (14-ம் தேதி) உயிரிழந்தார். இதனை கொலை வழக்காக நாகரசம்பட்டி போலீஸார் மாற்றினர். மேலும், தலைமறைவாக இருந்த திமுக கவுன்சிலர் சின்னசாமி, காளியப்பன் உட்பட 2 பேரை போலீஸார் இன்று (15ம் தேதி) கைது செய்தனர். தலைமறைவாக உள்ள புலிபாண்டியை தேடி வருகின்றனர். இருதரப்பு மோதலில் உயிரிழந்த ராணுவ வீரர் பிரபுவிற்கு புனிதா என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT