Published : 15 Feb 2023 06:02 AM
Last Updated : 15 Feb 2023 06:02 AM
சென்னை: மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை நெருல் பகுதியைச்சேர்ந்த சன்னி அலாப்பட் மகன் ஸ்டீவன் (25). இவர்,சென்னை ஐஐடியில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் எம்.எஸ். 2-ம் ஆண்டு படித்துவந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் நண்பர்களுடன் தங்கியிருந்தார்.
இந்நிலையில், விடுதி அறையில் ஸ்டீவன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவலறிந்த கோட்டூர்புரம் காவல்ஆய்வாளர் விஜயன் உள்ளிட்ட போலீஸார் விரைந்துசென்று, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். ஸ்டீவன் எழுதிய கடிதம் ஒன்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.படிப்பில் கவனம் செலுத்த முடியாததால், ஸ்டீவன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வேறுஏதேனும் காரணம் உள்ளதா எனத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மற்றொரு மாணவர்: கர்நாடக மாநிலம் ஹேல்தரோஜி பகுதியைச் சேர்ந்தவர் வீரேஷ் (19). இவர் சென்னை ஐஐடியில் பி.டெக். முதலாமாண்டு படித்து வருகிறார். ஐஐடி விடுதியில் தங்கியிருந்த அவர் மன அழுத்தப் பிரச்சினைக்கு வழங்கப்பட்டிருந்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனால் உடல் நலன் பாதிக்கப்பட்ட அவரை, சக மாணவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
தனது குடும்பத்தினரைப் பிரிந்ததனாலும், சரியாக படிக்க முடியாததாலும் வீரேஷ் தற்கொலைக்கு முயன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஐஐடி உறுதிமொழி: இது தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எம்.எஸ். முதுநிலைப் பட்டப் படிப்பில் எலெக்ட்ரிக்கல் பொறியியல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்துவந்த மாணவரின் மரணம்அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு ஐஐடி கல்விநிறுவனம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான உறுதியையும் வழங்குகிறது. இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT