Published : 12 Feb 2023 02:52 PM
Last Updated : 12 Feb 2023 02:52 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களில் ரூ.72.50 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலையில் கொள்ளையடிக்கப்பட்ட ஏடிஎம் மையம் எதிரே குவிந்துள்ள போலீஸார்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.72.50 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற வட மாநில கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை நகரம் மாரியம்மன் கோயில் 10-வது வீதி, தேனிமலை, போளூர் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் செல்லும் பாதை என 3 இடங்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையங்கள் மற்றும் கலசப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் ஆகியவை இயங்குகின்றன. இதில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் 3 ஏடிஎம் மையங்களில் இருந்து இன்று(12-ம் தேதி) அதிகாலை புகை வெளியேறுவதை கவனித்த அவ்வழியாக சென்றவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல், கலசப்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையம் உடைக்கப்பட்டு திறந்திருப்பது குறித்தும் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நான்கு ஏடிஎம் மையங்களுக்கும் சென்று காவல்துறையினர் பார்வையிட்டனர். அப்போது, காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரங்கள் பெயர்க்கப்பட்டு, அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், தடயங்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் தெரியாமல் இருக்க ஏடிஎம் இயந்திரங்களை தீயிட்டு கொளுத்திவிட்டு கொள்ளை கும்பல் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து, சம்மந்தப்பட்ட வங்கி மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஏடிஎம் இயந்திரங்களில் இருந்த பணம் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டது.

ஏடிஎம் இயந்திரங்கள் எரிப்பு: திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெருவில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.19.50 லட்சம், தேனிமலை ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.32 லட்சம், போளூர் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.18 லட்சம், கலசப்பாக்கம் ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.72.50 லட்சத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது. 4 ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம், ஓரே செயல்வடிவத்தை கொண்டுள்ளது. இதனால், ஓரே கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே திருவண்ணாமலை - வேலூர் வழித்தடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதில், கொள்ளை நிகழ்வு நடைபெற்ற நேரத்தில் ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனம், வேலூர் நோக்கி அதிவேகமாக செல்வது தெரியவந்தது. மேலும், இக்கொள்ளையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதும், முன்கூட்டியே நோட்டமிட்டு, திட்டமிட்டு கொள்ளையடித்துள்ளதும் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கொள்ளை நடைபெற்ற ஏடிஎம் மையங்களை வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் டிஐஜி முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன்(திருவண்ணாமலை), ராஜேஷ்கண்ணா(வேலூர்), பாலகிருஷ்ணன்(திருப்பத்தூர்), கிரண் ஸ்ருதி(ராணிப்பேட்டை) ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க டிஐஜி முத்துசாமி தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏடிஎம் மையத்தின் கதவு உள்ளிட்ட இடங்களில் பதிவான கை ரேகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போளூர், கலசப்பாக்கம், திருவண்ணாமலை காவல்நிலையங்களில் தனித்தனியே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மெக்கானிக் ஈடுபட்டிருக்கலாம்: ஐஜி கண்ணன் கூறும்போது, ''திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளை நடைபெற்றுள்ளது. காஸ் வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்த விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தடயம் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம். குழுவாக வந்து கொள்ளையடித்துள்ளனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். 8 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகிறோம். எஸ்பி தலைமையிலான தனிப்படை, வெளி மாநிலத்துக்கு விரைந்துள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் ஏடிஎம் மையங்களில் காவலாளிகளை பணியில் அமர்த்துவதை நிறுத்தி உள்ளனர். ஏடிஎம் இயந்திரம் அமைப்பு குறித்து நன்றாக தெரிந்த மெக்கானிக் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். 4 ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ரூ.70 லட்சம் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியை சரியாக மேற்கொள்ளாத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் மகாராஷ்டிரா, ஓடிசா, ஆந்திர பிரதேச மாநிலங்களிலும் கொள்ளை நடைபெற்றுள்ளது. அம்மாநில காவல்துறையுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் கொள்ளையர்களை கைது செய்வோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x