Published : 11 Feb 2023 07:03 AM
Last Updated : 11 Feb 2023 07:03 AM
திண்டுக்கல்: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல் ஆய்வாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் வீரகாந்தி. இவர் தனது காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் காவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தார். இதையடுத்து ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் துறை ரீதியான விசாரணை நடத்த, அப்போதைய ஏடிஎஸ்பி லாவண்யா நியமிக்கப்பட்டார். அவரிடம் பாதிக்கப்பட்ட பெண் காவலர் செல்போன் உரையாடல், எஸ்எம்எஸ் ஆகியவற்றை சமர்ப்பித்தார். இதையடுத்து வீரகாந்தி தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணை அறிக்கை, விசாகா கமிட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த அறிக்கை தொடர்பாக விசாகா கமிட்டி நடத்திய ஆய்வில், ஆய்வாளர் வீரகாந்தி மீதான புகார், உண்மை எனஉறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்குமாறு விசாகா கமிட்டி பரிந்துரைத்தது.
இந்நிலையில், வீரகாந்தியை பணிநீக்கம் செய்து திண்டுக்கல் டிஐஜி அபினவ்குமார் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் விசாகா கமிட்டியின் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைக்கு உள்ளான முதல் காவல் ஆய்வாளர் வீரகாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT