Published : 08 Feb 2023 04:13 AM
Last Updated : 08 Feb 2023 04:13 AM
தருமபுரி: பாலக்கோடு நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் லஞ்சம் பெற்ற கண்காணிப்பாளர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்தவர் குப்புசாமி (47). இவர், சாலைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தனது வருங்கால வைப்பு நிதியை அடிப்படையாகக் கொண்டு பெறக்கூடிய கடனுக்காக இவர் முயற்சித்து வந்தார்.
இது தொடர்பான பணிகளை செய்து கொடுக்க நெடுஞ்சாலைத் துறையின் பாலக்கோடு உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணி யாற்றும், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரைச் சேர்ந்த சந்திரசேகர் (48), இளநிலை உதவியாளராக பணியாற்றும் பாலக்கோடு அடுத்த தண்டுக்காரன அள்ளியைச் சேர்ந்த தனபால் (40) ஆகியோர் லஞ்சம் கேட்டுள்ளனர்.
லஞ்சம் வழங்க விரும்பாத குப்புசாமி, இது தொடர்பாக தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தார். பின்னர், அவர்கள் அளித்த வழிகாட்டுதலின்படி ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை இளநிலை உதவியாளர் தனபாலிடம் நேற்று குப்புசாமி கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீஸார் தனபாலை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையின்போது, கண் காணிப்பாளர் சந்திரசேகர் கூறியதைத் தொடர்ந்தே லஞ்சப் பணத்தை பெற்றதாக போலீஸாரிடம் தனபால் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து நேற்று மாலை வரை விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்ததுடன், இருவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT