Published : 05 Feb 2023 03:36 AM
Last Updated : 05 Feb 2023 03:36 AM
மதுரை: மதுரை மத்திய சிறைச்சாலையில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள ‘எக்ஸ்ரே பேக்கேஜ்’ இயந்திரத்தை சிறைத்துறை துணைத்தலைவர் பழனி ஆய்வு செய்தார்.
தமிழக சிறைத்துறைக்கு டிஜிபியாக அமரேஷ் பூஜாரி பொறுப்பேற்றதற்குப்பின் சிறைத் துறையில் பல்வேறு மாற்றங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். சிறைவாசிகள், சிறைக் காவலர்களின் நலன், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சிறைவாசிகளுக்கு இன்டர்காம் தொலைபேசி மூலம் நேர்காணல் வசதி, நூலக மேம்பாடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளுக்கும் பாதுகாப்புகளை பலப்படுத்தும் வகையில் சிறைக்குள் கொண்டு செல்லும் பொருட்கள் சோதனைக்குப்பின் அனுமதிக்கும் வகையில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்பட்டு வருகிறது. அதனையொட்டி மதுரை மத்திய சிறையில் எக்ஸ்ரே பேக்கேஜ் இயந்திரம் நிறுவப்பட்டது. இதனை காவல் சிறைத்துறை துணைத்தலைவர் பழனி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வசந்தகண்ணன், சிறை அலுவலர் பாலகிருஷ்ணன், தொழில்நுட்பப்பிரிவு எஸ்ஐ திருமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
மதுரை மத்திய சிறைக்கு இனிவரும் பொருட்கள் அனைத்தும் இந்த கருவி மூலம் ஸ்கேனிங் செய்து சிறைக்குள் கொண்டு செல்லப்படுவதால் தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறைக்குள் செல்வது தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT