Published : 04 Feb 2023 06:15 AM
Last Updated : 04 Feb 2023 06:15 AM

கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் பரிசு விழுந்ததாக கூறி ரூ.5.22 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பெண்ணிடம் பரிசு விழுந்துள்ளதாகக் கூறி ரூ.5.22 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து, சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள மேசிகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மல்லிகா(28). இவர் ஆன்-லைன் மூலம் பொருட்கள் வாங்குவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி, இவர் வழக்கமாக பொருட்கள் வாங்கும் இணையதளத்தில் இருந்து, கடிதம் ஒன்று வந்தது. அதில், உங்களுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பரிசு விழுந்துள்ளதாக கூறப்பட்டு கூப்பன் இணைக்கப்பட்டு இருந்தது. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள செல்போன் எண் ஒன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த எண்ணை தொடர்பு கொண்ட போது, அதில் பேசிய நபர், பரிசுத் தொகை தங்களுடைய வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்ய, நீங்கள் அதற்கான வரி, ஜிஎஸ்டி, நடைமுறை கட்டணம் உள்ளிட்டவை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இதனை நம்பிய மல்லிகா, அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்குகளில் ரூ.5 லட்சத்து 22 ஆயிரம் செலுத்தினார். ஆனால், பரிசுத் தொகை வரவில்லை.

அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மல்லிகா, இதுகுறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x