Published : 29 Jan 2023 04:03 AM
Last Updated : 29 Jan 2023 04:03 AM
சென்னை: மநீம இணையதள பக்கம் ‘ஹேக்’செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மநீம சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை மர்ம நபர்கள் சிலர் முடக்கி மநீம கட்சியை, காங்கிரஸ் கட்சியுடன் வரும் 30-ம் தேதி இணைக்கப்படும் என்னும் அறிவிப்பு வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ‘‘மநீம கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம்விஷமிகளால் ‘ஹேக்' செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயக சக்திகளை ஒடுக்கியே பழக்கப்பட்டவர்களின் இழிசெயல்களுக்கு அஞ்சாமல் தக்க பதிலடி கொடுப்போம்’’ எனமநீம தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக மநீம சார்பில் தலைமை நிலைய மாநில செயலாளர் அர்ஜூனர் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதள பக்கம் ‘ஹேக்' செய்யப்பட்டதில் அரசியல் சதி இருக்கிறது. எங்களை நேரடியாக தாக்க முடியாதவர்கள் மறைமுகமாக ‘ஹேக்' செய்து தாக்க நினைக்கிறார்கள். யார்? யார்? மீது சந்தேகம் என்ற பட்டியலை கொடுத்துள்ளோம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT