Published : 25 Jan 2023 06:45 AM
Last Updated : 25 Jan 2023 06:45 AM

கந்துவட்டி கொடுமையால் தம்பதி தற்கொலை: சேலத்தில் போலீஸார் விசாரணை

சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ராஜேந்திரன், சாந்தி.

சேலம்: சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவரது மனைவி சாந்தி (55). இவருக்கு ராமு, ராமவேல் என்ற மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

மகன்கள் இருவரும் மாடியிலும், பெற்றோர் வீட்டின் கீழ் தளத்திலும் வசித்து வந்தனர். நேற்று காலை ராமவேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தபோது வீடு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது தாயும், தந்தையும் இறந்து கிடந்தனர்.

அதிர்ச்சியடைந்த ராமவேல், அழகாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் சம்பவ இடம் சென்று, இருவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணை குறித்து போலீஸார் கூறியதாவது: ராஜேந்திரன் பூர்வீகமாக வசித்து வந்த வீட்டை, அதே பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரிடம் 5 வருடத்துக்கு முன்பு பத்திரம் அடமானம் வைத்து ரூ.19 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு நடேசன் வட்டியும், அசலுமாக ரூ.40 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லையெனில் வீட்டை எழுதி கொடுக்க வேண்டுமென்றும் அடிக்கடி தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், அசோக் என்பவரிடம் வீட்டை விற்று விட்டு கடனை கொடுத்துவிட ராஜேந்திரன் முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், நடேசன் நேற்று முன்தினம் மீண்டும் பணம் கேட்டதால் மனமுடைந்த ராஜேந்திரன், சாந்தி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும், வீட்டிலிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், எங்கள் தற்கொலைக்கு காரணம் நடேசன், அவரது குடும்பத்தினர் என்றும், கந்துவட்டி கொடுமை குறித்தும் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x