Published : 24 Jan 2023 06:47 AM
Last Updated : 24 Jan 2023 06:47 AM
தாம்பரம்: செங்கல்பட்டு அருகே மூடாமல் இருந்த செப்டிக் டேங்கில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் ஊராட்சி செயலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சாஸ்திரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் லாரி ஓட்டுநரான இவர் வெங்கிடாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் பிடிக்க தனது 6 வயது மகன் பிரதீஷூடன் சென்றார். அப்போது கூட்டம் அதிகமாக இருக்கவே மணிகண்டன் தண்ணீர் பிடிப்பதில் கவனம் செலுத்தி உள்ளார். தண்ணீர் பிடித்தபின் குழந்தை காணாமல் போனதால் அதிர்ந்த மணிகண்டன் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.
அப்போது அருகே ஊராட்சி அலுவலக வளாகத்தில் திறந்த நிலையில் இருந்த ‘செப்டிக் டேங்க்’ உள்ளே பார்த்தபோது பிரதீஷ் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். உடனே குழந்தையை மீட்ட கிராமத்தினர் சிங்கப்பெருமாள்கோவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பாலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூடப்படாத செப்டிக் டேங்கில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உத்தரவுப்படி ஊராட்சி செயலர் ரேணுகா, டேங்க் ஆபரேட்டர் குணசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜியிடம் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை நடத்த செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT