Published : 23 Jan 2023 04:13 AM
Last Updated : 23 Jan 2023 04:13 AM
தருமபுரி: பென்னாகரம் அருகே சந்தனக் கட்டைகள் வைத்திருந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
பென்னாகரம் வனச் சரக அலுவலர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் பென்னாகரம் அருகே சாலைகுள்ளாத்திரம்பட்டி கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அக்கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (45), மன்னேரி முருகன் (55), கிழக்கு கள்ளிபுரம் திம்மன் (47), மாணிக்கம் (67) ஆகியோர் சந்தன மரக்கட்டைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து, அவர்களிடமிருந்த 11.500 கிலோ சந்தனக் கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, மகேந்திரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு கூறியதாவது:
வனப் பகுதியில் யாராவது சந்தன மரங்களை வெட்டுவது தெரிந்தால் உடனடியாக தருமபுரி மாவட்ட வன அலுவலகத்தை 1800 4254 586 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும். வனக்குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT