Published : 21 Jan 2023 06:19 PM
Last Updated : 21 Jan 2023 06:19 PM
திருச்சி/அரியலூர்: 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
திருச்சி தாராநல்லூர் கீழதேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (22). கார் ஓட்டுநரான இவர்,கடந்தாண்டு மார்ச் 16-ம் தேதி 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து செல்வமணியைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஆர்.அருள்செல்வி ஆஜராகி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி வத்சன் நேற்று தீர்ப்பளித்தார்.
அப்போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் எண்ணத்தில் கடத்திச் சென்றதற்காக செல்வமணிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்துஉத்தரவிட்டார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சத்தை இழப்பீட்டுத் தொகையாக அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
25 ஆண்டுகள் சிறை
அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த கரைவெட்டிபரதூர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல்(20). இவர் கடந்த 2020-ம் ஆண்டில் 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவியை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சக்திவேலை போக்சோ சட்டத்தில் அரியலூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிஆனந்தன், குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ம.ராஜா ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT