Published : 13 Jan 2023 04:07 AM
Last Updated : 13 Jan 2023 04:07 AM

உதகையில் ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்தி பணம், நகை பறித்த வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது

உதகை: உதகையில் ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்தி 20 பவுன் நகை, ரூ.5 லட்சம் பறித்த வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அந்தோணிதாஸ் (53 ). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், தனது நண்பர் களான பொள்ளாச்சியை சேர்ந்த ஜாபர், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மாதவன் ஆகியோருடன் இணைந்து தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், உதகையில் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக இடங்கள் உள்ளதா என்று பார்ப்பதற்காக, நீலகிரி மாவட்டம் செல்ல முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, தெரிந்த நபர்கள் மூலமாக கீழ் கோத்தகிரி சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (25), தர்மராஜ் (25) உட்பட 6 பேர் அவருக்கு அறிமுகமாகினர்.

இதையடுத்து, திட்டமிட்டபடி கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அந்தோணிதாஸ் உட்பட 3 பேரும் உதகைக்கு வந்தனர். அப்போது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களை சுற்றி காட்டுவதாக கூறி, குணசேகரன் உள்ளிட்டோர் இடுஹட்டி அடுத்த கனக்கொம்பை பகுதியிலுள்ள வீட்டில் 3 பேரையும் 2 நாட்கள் அடைத்து வைத்தனர்.

மேலும், அவர்களை தாக்கி 20 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணம் மற்றும் விலை உயர்ந்த கார்,மடிக்கணினி உள்ளிட்டவற்றை பறித்துவிட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் உதகை ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி உத்தரவின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து, கடசோலையை சேர்ந்த குணசேகரன் மற்றும் தர்மராஜை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை போலீஸார் கோவை மாவட்டம் சென்றனர். கடசோலையை சேர்ந்த அலெக்சாண்டர் (35), முரளி கிருஷ்ணன் (41) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள முக்கிய நபரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x