Published : 13 Jan 2023 06:59 AM
Last Updated : 13 Jan 2023 06:59 AM

சென்னை | சைபர் தாக்குதல் மூலம் கூட்டுறவு வங்கியை ஹேக் செய்து ரூ.2.61 கோடி கொள்ளையடித்த 2 நைஜீரியர் கைது

எக்கேன் காட்வின், அகஸ்டின்.

சென்னை: சென்னை மண்ணடியில் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த நவம்பர் 18-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தனர். அதில், ``எங்களது வங்கியின் சர்வரை ஹேக் செய்து வங்கிப் பணம் ரூ.2.61 கோடியை சைபர்கொள்ளையர்கள் ஆன்லைன் வழியாகக் கொள்ளை அடித்து விட்டனர். எனவே, குற்றவாளிகளைக் கைது செய்து எங்களது வங்கிப்பணத்தை மீட்டுத் தர வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கச் சென்னை சைபர் க்ரைம் போலீஸாருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதன்படி, ஆய்வாளர் வினோத்குமார் தலைமையில் தனிப்படைஅமைக்கப்பட்டு விசாரணையில் இறங்கினர். இதில், பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

பொதுவாக வங்கிகள், தங்களது வங்கி கிளைகளுக்கிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இணையதளம் இல்லாமல் ‘கோர் பாங்கிங்சிஸ்டம்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன. அதில் ஒரே ஒரு கோர் பாங்கிங்சிஸ்டம் மட்டும் இணைய தளத்துடன் இணைத்து பயன்படுத்தப்பட்டு வருவதை சைபர் கொள்ளையர்கள் அறிந்து கொண்டனர்.

இதைப் பயன்படுத்தி சைபர்கொள்ளையர்கள் கூட்டுறவு வங்கியின் சர்வரை ஹேக் செய்வதற்காக மெயில் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த மெயிலை தொட்ட உடன்வங்கியின் இணையவழி செயல்பாடு தொடர்பான அத்தனை விவரங்களும் சைபர் கொள்ளையர்கள் வசம் சென்றுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கி தரவுகள், பணப் பரிவர்த்தனை மற்றும் ரகசியகுறியீடு தொடர்பான அத்தனை விவரங்களையும் 4 மாதங்களாகக் கண்காணித்து வந்துள்ளனர்.

பின்னர் சைபர் தாக்குதல் நடத்திகூட்டுறவு வங்கி சர்வரில் நுழைந்துகடந்த நவம்பர் 18-ம் தேதி காலை 6 மணி முதல் 9 மணிக்குள் ரூ.2.61கோடியை சைபர் கொள்ளையர்கள் ஆன்லைன் வழியாக 41 பரிவர்த்தனைகளில் 32 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதைச் செய்துவிட்டு டெல்லியில் பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்கேன் காட்வின்(37), அகஸ்டின்(42) ஆகியஇருவரையும் சென்னை தனிப்படை போலீஸார் டெல்லி சென்றுகைது செய்தனர். வங்கிப் பணம்ரூ.1 கோடியே 5 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் மேலும் கூறுகையில், ``சைபர் கொள்ளையர்கள் இணைய வழியில் பணப்பரிவர்த்தனை செய்த வங்கிக் கணக்குகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கணினி ஐபி முகவரியை ஆய்வு செய்ததில் அவர்கள் டெல்லி உத்தம் நகரிலிருந்துசெயல்பட்டது தெரிந்தது. அங்கு சென்று அவர்களைக் கைது செய்தோம். கொள்ளையர்கள் போலிஆவணங்கள் மூலம் 32 போலிவங்கிக் கணக்குகளை உருவாக்கிகொள்ளையடித்த பணத்தை அந்தகணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.

இதே கும்பல் குஜராத் உட்பட பல்வேறு மாநிலத்தில் உள்ள வங்கி ஒன்றிலும் இதே பாணியில் கொள்ளையடித்துள்ளது. கொள்ளையடித்த பணத்தை கிரிப்டோகரன்சிகளாக மாற்றியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x