

சென்னை: வங்கியிலிருந்து ஆன்லைன் மூலம் மோசடி செய்து ரூ.2.61 கோடி கொள்ளையடித்த வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இருவரை டெல்லியில் கைது செய்த சைபர் க்ரைம் போலீஸார் அவர்களிடமிருந்து ரூ.1.05 கோடியை மீட்டனர்.
இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள தகவல்: சென்னையைச் சேர்ந்த வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருந்த நிறுவனத்தின் கணக்கிலிருந்து மோசடியாக இணையவழியில் ரூ.2 கோடியே 61 லட்சம் ஆன்லைன் மூலம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாிடம் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதே குற்ற செயல்வகை முறையை பயன்படுத்தி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், மற்றும் தமிழ்நாட்டில் பதிவான வழக்குகளிலும் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படாத நிலையில், சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவு போலீசார் இந்த வழக்கினை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, வங்கி பரிவர்த்தனைகள், மொபைல் அழைப்பு விவரங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தும் குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதை கண்டறிந்தனர்.
அதன் பேரில் சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு தனிப்படை காவல் குழுவினர், டெல்லிக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி வங்கி ஆன்லைன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நைஜீரியா நாட்டைச்சேர்ந்த எக்கேன் காட்வின் (37), அகஸ்டின் (42) ஆகிய 2 நபர்களை ஜனவரி 8-ம் தேதியன்று காவல் குழுவினர் டெல்லியில் கைது செய்து, அங்குள்ள துவாராக மெட்ரோபாலிட்டன் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து மேல் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.
விசாரணையில் 41 பரிவர்த்தனைகளில் மொத்தம் 32 வங்கி கணக்குகளுக்கு பணபரிமாற்றம் நடந்துள்ளது கண்டறியப்பட்டு, தொடர்புடைய 15 வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இது வரை சுமார் ரூ.1 கோடியே 5 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டைச்சேர்ந்த இருவரும் விசாரணைக்குப்பின்னர் வியாழக்கிழமை (ஜன.12) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.