Published : 09 Jan 2023 06:28 AM
Last Updated : 09 Jan 2023 06:28 AM

பழவேற்காடு ஏரியில் மீனவர்களிடையே மோதல்: 7 பேர் காயம்; 10 பேர் கைது

பொன்னேரி: பழவேற்காடு ஏரியில் இரு தரப்பு மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே பழவேற்காடு ஏரியில், பழவேற்காடு பகுதியை சேர்ந்த 12 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சூழலில், பழவேற்காடு ஏரியில் மீன் மற்றும் நண்டு பிடிப்பது தொடர்பாக, கடலில் நண்டு பிடித்து வந்த கூனங்குப்பம் மீனவர்களுக்கும், ஏரியில் மீன் பிடித்துவரும் ஆண்டிக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம், கோட்டைக்குப்பம் ஆகிய மீனவ கிராம மக்களுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக பிரச்சினை இருந்து வந்தது.

பல்வேறு போராட்டங்கள், சமாதான கூட்டங்களுக்குப் பிறகு, கடந்த டிசம்பர் 13-ம் தேதி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், “கூனங்குப்பம் மீனவர்கள், பழவேற்காடு ஏரியின் ஓரக் கரையில் பாடுமுறைப்படி மீன் பிடிக்க வேண்டும்; கடலில் பயன்படுத்தும் அரை வலை, நண்டு வலை மற்றும் டிராம்மல் வலை ஆகியவற்றை பழவேற்காடு ஏரியில் பயன்படுத்த தடை செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.

இருப்பினும், கூனங்குப்பம் மீனவர்கள் மற்றும் நடுவூர் மாதாகுப்பம் உள்ளிட்ட பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் எனஇருதரப்பு மீனவர்களிடையே இன்னும் சுமூகமான சூழல் ஏற்படவில்லை.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி பழவேற்காடு ஏரியில் நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்குகூனங்குப்பம் மீனவர்களும் மீன் பிடித்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், இருதரப்பு மீனவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. இதில், இரு தரப்பைசேர்ந்த 6 பேர் காயமடைந்து, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் தொடர்பாக, இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது திருப்பாலைவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், பழவேற்காடு ஏரியில் கோட்டைக்குப்பம் மீனவர்களும், கூனங்குப்பம் மீனவர்களும் நேற்று முன்தினம் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, கூனங்குப்பம் மீனவர்கள், தங்கள் பகுதியை தாண்டி வலையை வீசியதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

பெண்கள் போராட்டம்: இதுகுறித்து தகவல் அறிந்த நடுவூர் மாதாகுப்பம் மீனவர்கள் சம்பவ இடம் விரைந்தனர். அங்கு நடுவூர் மாதாகுப்பம், கூனங்குப்பம் மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட இச்சம்பவத்தில், நடுவூர் மாதா குப்பத்தை சேர்ந்த ராபர்ட், சந்தியாகிராஜ், சகாயராஜ், மார்டீன், ஆரோக்கியராஜ், பாலு, சாலமன் ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோதலில் ஈடுபட்ட கூனங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் இரவு கோட்டைக்குப்பம், நடுவூர் மாதாகுப்பம், ஆண்டிக்குப்பம் மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் 200-க்கும் மேற்பட்டோர் பழவேற்காடு புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு பணியில் போலீஸார்: இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த திருப்பாலைவனம் போலீஸார், கூனங்குப்பத்தைச் சேர்ந்த 10 பேரை நேற்று கைது செய்தனர்.

பழவேற்காடு பகுதியில் இரு நாட்கள் ஏற்பட்ட மீனவர்கள் இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஆகவே, கூனங்குப்பம், நடுவூர் மாதாகுப்பம், கோட்டைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x