Published : 07 Jan 2023 06:10 AM
Last Updated : 07 Jan 2023 06:10 AM
திருப்பூர்: செல்போனில் கடன் செயலி வழியாக மோசடியில் ஈடுபட்ட 5 பேரை திருப்பூர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அவிநாசி அருகே பெருமா நல்லூர் பொங்குபாளையத்தை சேர்ந்த பெண், கடந்த 28-ம் தேதி செல்போன் மூலம் கடன் வழங்கும்செயலிகளில் ரூ.15 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். தவணைத் தொகை செலுத்தும் முன்னரே, பணத்தை உடனடியாக தராவிட்டால் உனது புகைப்படத்தை தவறாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவதாக அப்பெண்ணின் செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் அப்பெண் புகார் அளித்தார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், செல்போன் செயலி வழியாக கடன் வழங்கும் கும்பல், திருப்பூர் காதர்பேட்டையில் இருந்து செயல்படுவது கண்டறியப்பட்டது. அப்பகுதியில் சோதனை நடத்தி, கேரள மாநிலம் கோழிக்கோடு மடவூரை சேர்ந்த முகமது அஸ்கர் (24), கொடுவாளி முகமது ஷாபி (36), மலப்புரம் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த முகமது சலீம் (37), அனிஷ்மோன் (33), அஸ்ரப் (46) ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சிம்கார்டுகள் பாக்ஸ் 11, மோடம் 6, மடிக்கணினி 3, யூபிஎஸ் 1, பேட்டரி 1, சிம்கார்டு 500, கிரெடிட் கார்டு 30 ஆகியவை கைப்பற்றப்பட்டன. கடந்த ஒன்றரை மாதங்களாக இவர்கள் கடன் செயலியை நடத்தி, லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கூறியதாவது: இக்கும்பலுக்கு வெளிநாடு களில் உள்ள மோசடி கும்பலுடன்தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்கள், புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். இணைய வழியாக கடன் செயலி மூலம் வழங்கப்படும் கடனை பொதுமக்கள் வாங்கக்கூடாது. செயலி மூலம் கடன் தருவதாக யாராவது போன் செய்தால் ‘1930’ என்ற எண்ணில் புகார் அளிக்கலாம், என்றார்.
புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி, சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் சித்ராதேவி, காவலர்கள் பாலுச்சாமி, சந்தானம், பரமேஸ்வரன், கருப்பையா, முத்துக்குமார், சந்தோஷ்குமார், குமரவேல், சுதாகர் ஆகியோர் அடங்கிய தனிப்படையை பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT