Published : 06 Jan 2023 06:23 PM
Last Updated : 06 Jan 2023 06:23 PM
திருப்பூர்: ஆன்லைன் கடன் செயலி மூலம் பொதுமக்களுக்கு கடன் வழங்கும் கும்பல், பின்னர் அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பணமோசடி தொடர்பாக பாதிக்கப்பட்ட ஏராளமானோர் போலீசில் புகார் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் ஆன்லைன் கடன் செயலியால் பாதிக்கப்பட்ட பெருமநல்லூரை சேர்ந்த பெண் ஒருவர், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,சசாங் சாயிடம் புகார் தெரிவித்தார், இதையடுத்து பொதுமக்களை ஏமாற்றி பணமோசடி மற்றும் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டு கும்பலை பிடிக்க சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சித்ரா தேவி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மோசடி கும்பல் யாரென்று விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்களது செல்போன் எண்ணின் சிக்னலை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த கும்பல் திருப்பூர் காதர்பேட்டையில் இருந்து பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசி வருவது செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் காதர்பேட்டை சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கட்டிடத்தில் கால்சென்டர் அமைத்து கடன் செயலி மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநில கோழிக்கோடு பகுதியை சேர்ந்த முகமது அஸ்கர் (வயது24) முகமது ஷாபி (36), முகமது சலீம், (37)அனிஸ்மோன் (33), அஷ்ரப் (46) என்பது தெரியவந்தது. 5 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க பயன்படுத்திய 6 இணையதள மோடம், 3 லேப்டாப்கள், 11 சிம் பாக்ஸ் (ஒரு பாக்சில் 100 சிம்கார்டுகள்), மற்றும் 500 சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் காதர்பேட்டையில் கால்சென்டர் அமைத்திருந்த அவர்கள் ஒரு நாளைக்கு 3500 பேரை தொடர்பு கொண்டு இவர்களுக்கு ஸ்பீடு லோன், கேண்டி பே, ஈஸி லோன், லக்கி மணி என்ற நான்கு வெளிநாட்டு கடன் செயலி மூலம் ரூ.3000 முதல் ரூ.15000 வரை கடன் வழங்குவதாக கூறியுள்ளதுடன், இதற்காக இ.மெயில் முகவரி, ஆதார் கார்டு எண், புகைப்படம் ஆகியவற்றை வாங்கியுள்ளனர். பணம் தேவைப்பட்டவர்கள் மோசடி கும்பல் என்பது தெரியாமல் தங்களது ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளனர்.
அப்படி கடன் பெற்றவர்கள் கடனை 2 வாரத்தில் செலுத்தியும், அனுப்பிய பணம் எங்களது வங்கி கணக்கிற்கு வரவில்லை. எனவே பணத்தை திரும்ப அனுப்புங்கள். இல்லையென்றால் உங்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து உங்களது உறவினர்கள், நண்பர்களின் வாட்ஸ்அப் மற்றும் இணையதளங்களில் பதிவேற்றி விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பலர் மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர்.
தொடர்ந்து மிரட்டல் விடுக்கவே பாதிக்க ப்பட்டவர்கள் திருப்பூர் எஸ்.பி.யிடம் புகார் செய்துள்ளனர். எஸ்.பி. அமைத்த தனிப்படை போலீசாரின் பிடியில் தற்போது 5 பேரும் சிக்கிக்கொண்டனர். இந்த கும்பல் தமிழகம் முழுவதும் பலரிடம் பேசி பணம் பறித்து ஏமாற்றியுள்ளனர். அவர்கள் புகார்கள் கொடுக்கும் பட்சத்தில் 5 பேர் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., சசாங் சாய் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “கடன் செயலி மூலம் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த 5 பேரை கைது செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம். அவர்களின் பணத்தை மீட்டுதருவோம். இந்த சம்பவம் சங்கிலி தொடர் போல் நீள்கிறது. வெளிநாட்டு மோசடி கும்பலுடன் இந்த மோசடி கும்பலுக்கு தொடர்பு உள்ளது. அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது இந்த மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்படும் கடன் செயலி மூலம் பணம் பெற வேண்டாம். அப்படி யாராவது போன் செய்தால் 1930 என்ற போன் நம்பரை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். கைதானவர்கள் 2 மாதங்களுக்கு மேலாக திருப்பூர் காதர்பேட்டையில் தங்கியிருந்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment