Published : 04 Jan 2023 06:37 PM
Last Updated : 04 Jan 2023 06:37 PM
கும்பகோணம்: கும்பகோணம், மாதுளம்பேட்டை, சீதளாமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கையன் மகள் செந்தாமரை (41). இவர் வெளிநாட்டில் ஓட்டுநராக வேலைபார்த்து வந்துள்ளார். பின்னர் அழகு நிலையத்தில் பணியாற்றியுள்ளார். இவர், வெளிநாட்டிலிருந்து வந்தவுடன், உறவினர்களிடம் தான் கொடுத்தனுப்பிய பணத்தையும், தனது வீட்டையும் கேட்டுள்ளார். ஆனால், உறவினர்கள் வீட்டை அபகரித்துக்கொண்டும், அவர் கொடுத்து அனுப்பிய பணம் இல்லை என்று தெரிவித்ததால், இவர் சற்று மனநிலை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், கும்பகோணம் மேற்கு மற்றும் தாலுக்கா காவல் நிலையம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் அனுப்பியுள்ளார்.
போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் மீண்டும் புகாரளிக்க வந்தார். இதனையறிந்த போலீஸார், நீதிமன்றச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த செந்தாமரையை மறித்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த செந்தாமரை, சாலையில் நடுவில் வாகனத்தை நிறுத்தி விட்டு, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போலீஸாரை தள்ளி விட்டும் ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார், மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அப்போது அங்கிருந்த சோழபுரம் காவல் நிலைய பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி, செந்தாமரையை சமாதானம் செய்தபோது, அந்த பெண் காவலரையும், பிடித்து கீழே தள்ளி விட்டும், சட்டையை பிடித்து இழுத்துத் தகாத வார்த்தைகளால் பேசி, நீதிமன்றத்துக்குள் செல்ல முயன்றார்.
இது குறித்து தகவலறிந்த கிழக்கு காவல் ஆய்வாளர் அழகேசன் மற்றும் போலீஸார், அந்த இடத்திற்குச் சென்று செந்தாமரையை, பிடித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குக் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பலத்த காயமடைந்த சோழபுரம் காவல் நிலைய பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் சுமதி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், செந்தாமரை, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருப்பதால், இது போன்று நடந்துள்ளார் என போலீஸார் தெரிவித்தனர். இதனால் கும்பகோணம் நீதிமன்றச் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT