Published : 02 Jan 2023 07:57 AM
Last Updated : 02 Jan 2023 07:57 AM
புவனேஷ்வர்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த கும்பல், வேலைவாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடிகணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளது.
இதுகுறித்து ஒடிசா மாநிலத்தின் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி நாராயண் பங்கஜ் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர் குழு சில வெப்சைட் டெவலப்பர் உதவியுடன் வேலைவாய்ப்பு மோசடிகளை அரங்கேற்றியுள்ளது. இளைஞர்களிடன் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் கறக்க கால்சென்டர் அமைக்கப்பட்டு அதில் 50 பேர் வேலையும் பார்த்துள்ளனர். குஜராத், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் வேலைதேடும் அப்பாவி இளைஞர்களை குறிவைத்தே இந்த கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. 50,000 பேரிடம் கோடிக்கணக்கான ரூபாயை இந்த கும்பல் சுருட்டியுள்ளது. இந்த மோசடி கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாபர் அகமது (25) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது மூன்று உறவினர்களுடன் கூட்டணி அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் அனைவரும் பொறியியல் பட்டதாரிகள் ஆவர்.
கைது செய்யப்பட்ட அகமது, அலிகாரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 5 நாள் காவலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா இளைஞர்களை ஏமாற்றியது குறித்து அகமதுவிடம் விசாரிக்கப்பட உள்ளது. எனவே, புவனேஷ்வர் நீதிமன்றம் முன்பாகவும் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இவ்வாறு ஐ.ஜி. தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment