Published : 31 Dec 2022 05:47 AM
Last Updated : 31 Dec 2022 05:47 AM
சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் துணைத் தலைவராக இருந்த டி.மஸ்தானை, அவரது உறவினரே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த மஸ்தான் (66),, அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தார். 2005-ல் திமுகவில் இணைந்து, சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளராக பணியாற்றினார். மருத்துவரான மஸ்தானின் மனைவி சிவபாக்கியமும் மருத்துவர். இவர்களது மகன் ஹாரிஸ் ஷாநவாஸ், மகள் ஹரிதா.
கடந்த 22-ம் தேதி மாலை ஹாரிஸ் ஷாநவாஸுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. அன்று அதிகாலை மஸ்தான், தனது உறவினரும், ஓட்டுநருமான இம்ரான் பாஷாவுடன் காரில் செங்கல்பட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, மஸ்தானுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி, கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார் இம்ரான்.
மஸ்தானை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தந்தை இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூடுவாஞ்சேரி போலீஸில் ஹாரிஸ் ஷா நவாஸ் புகார் செய்தார்.
இதுதொடர்பாக தாம்பரம் காவல் துணைஆணையர் சிபிச் சக்ரவர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், இம்ரான் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில், இம்ரான்(26), தனது உறவினர் குரோம்பேட்டை தமீம் சுல்தான் அகமது(34), மற்றும் அவரது நண்பர்கள் சைதாப்பேட்டை நசீர் (38), பம்மல் தவுபிக் அகமது (31), குரோம்பேட்டை லோகேஷ்வரன்(23) ஆகியோருடன் சேர்ந்து மஸ்தானை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, இம்ரான் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
காரணம் என்ன?: கைது செய்யப்பட்ட இம்ரான், போலீஸாரிடம் கூறியதாவது: மஸ்தானிடம் அதிகம் பணம் இருந்ததால், அவரிடம் பாசம் இருப்பதுபோல நடித்தேன். அவர் என்னை நம்பியதால், கொஞ்சம் கொஞ்சமாக ரூ.15 லட்சம் கடன் வாங்கினேன்.
இந்த நிலையில், அவரது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதால், கடனை திருப்பிக் கேட்டார். என்னிடம் பணம் இல்லாததால், அவரை கொன்றுவிட திட்டமிட்டேன். நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொன்றுவிட்டு, இயற்கையாக மரணம் அடைந்ததுபோல நாடகமாட முடிவு செய்தேன்.
செங்கல்பட்டில் ஃபைனான்சியர் ஒருவர் எனக்கு கடன் தர ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதை வாங்கி கடனை அடைத்து விடுவதாகவும் மஸ்தானிடம் கூறி, அவரை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு புறப்பட்டேன். வழியில் தமீம், நசீர் ஆகியோர் காரில் ஏறிக் கொண்டனர். மற்றொரு காரில் தவுபிக் அகமது, லோகேஷ்வரன் ஆகியோர் பின்தொடர்ந்தனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும், காரை நிறுத்தி மஸ்தானின் வாய், மூக்கை அழுத்தி மூச்சுத் திணறச் செய்து, கொன்றுவிட்டு, மாரடைப்பால் இறந்ததாக அனைவரையும் ஏமாற்றினோம். இவ்வாறு அவர் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT