Published : 30 Dec 2022 05:24 AM
Last Updated : 30 Dec 2022 05:24 AM
சேலம்: ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் இரும்புக் கடையில் பணியாற்றி வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர், கடை பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் கடை உரிமையாளரை கத்தியால் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார்(36), தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சந்தோஷ்(32) ஆகியோர், சேலம் காடையாம்பட்டி அருகே தீவட்டிப்பட்டியில், சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு மற்றும் சிமென்ட் விற்பனைக் கடை நடத்தி வந்தனர்.
அவர்களது கடையில், பிஹார் மாநிலம் பேகுசிரா மாவட்டத்தைச் சேர்ந்த சோபித் (19) மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் சில மாதங்களாக தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், விற்பனையில் கிடைத்த தொகை ரூ.4 லட்சத்துடன், கடை உரிமையாளர்கள் சந்தோஷ், பிரேம்குமார் ஆகியோர் கடந்த 27-ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் புறப்பட ஆயத்தமாகினர். அப்போது, தொழிலாளர்களான சோபித், அவருடன் பணியாற்றிய சிறுவன் ஆகியோர், ரூ.4 லட்சத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன், சந்தோஷ் மற்றும் பிரேம்குமாரை தாக்க முற்பட்டனர்.
அதில், சந்தோஷை கத்தியால் சரமாரியாக குத்திய அவர்கள், பிரேம்குமாரையும் கத்தியால் குத்த முற்பட்டனர். ஆனால், பிரேம்குமார் கல்லால் தாக்க முற்பட்டதும் தொழிலாளர்கள் இருவரும் அங்கிருந்து தப்பினர்.
தப்பியவர்கள் கைது: அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷை மீட்டு, ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சந்தோஷ் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே,போலீஸார், தப்பி ஓடிய தொழிலாளர்கள் சோபித் மற்றும் சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
வட மாநிலத் தொழிலாளர்களால், சந்தோஷ் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் கூறியதைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன்: கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் சோபித் சேலம் மத்திய சிறையிலும், சிறுவன் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். வட மாநில தொழிலாளர்கள் இருவர், கடை உரிமையாளர்களை கத்தியால் குத்தி தாக்கும் காட்சி, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இக்காட்சி சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT