Published : 30 Dec 2022 04:30 AM
Last Updated : 30 Dec 2022 04:30 AM
உதகை: பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன் (51). இவர், நீலகிரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ‘கே’ பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது அலுவலகத்தில் பணிபுரிந்துவரும் திருமணமான 38 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரை, விசாகா விசாரணை குழுவுக்கு நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தார்.இதில், மோகன கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. மேலும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, உதகை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து, மோகன கிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணியம் (50) என்பவர், இந்த பாலியல் சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ தொகுப்பாக செய்தி வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ மொத்தம் 21 நிமிடம் ஒளிபரப்பாகும் வகையில் இருந்தது. அதில், பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்,உதகை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில், உதகை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் பிலிப் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடுதல், பெண்ணை அவமதித்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் சிவசுப்பிரமணியன் மீது போலீஸார்வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, தலைமறைவாகியுள்ள யூடியூபர் சிவசுப்பிரமணியனை போலீஸார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT