Published : 28 Dec 2022 04:25 AM
Last Updated : 28 Dec 2022 04:25 AM
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் விடுதி அறையில், பெண் ஒருவரை 5 நாட்களாக அடைத்து வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள போலீஸார், 4 பேரை தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் பணியைச் செய்து வரும் பெண் ஒருவருக்கு, நெய்வேலியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் மூலம், புதுச்சேரியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அசோக் குமாருக்கு அரசு வேலைக்கு ஏற்பாடு செய்ததாக கூறி, அந்த பெண் அவரிடமிருந்து கடந்த 10-ம் தேதி ரூ.35 ஆயிரம் பணத்தை முதற்கட்டமாக பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 22-ம்தேதி அசோக்குமார், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு அரசு வேலைக்காக ரூ.5 லட்சம் வைத்துள்ளதாகவும், புதுச்சேரிக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். அந்த பெண்ணும் அன்று இரவு புதுச்சேரிக்கு வந்துள்ளார். அப்போது, திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் விடுதிக்கு அவரை அசோக்குமார் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அசோக்குமாரின் நண்பர்கள் பிரபாகரன், சூர்யா, முருகன், சொர்ணராஜ் மற்றும் புவனேஷ் ஆகியோர் கொண்ட கும்பல், விடுதி அறையை பூட்டிக் கொண்டு அசோக்குமார் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த பெண்ணை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
தொடர்ந்து 5 நாட்கள் விடுதி அறையில் அடைத்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த கும்பல் அசந்த நேரத்தில் தப்பிய அந்த பெண், இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸில் நேற்று முன்தினம் புகாரளித்தார். இதையடுத்து அசோக்குமார், பிரபாகரன் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்த போலீஸார், மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT