Published : 28 Dec 2022 04:33 AM
Last Updated : 28 Dec 2022 04:33 AM
ஈரோடு: பெருந்துறையில் நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை - குன்னத்தூர் சாலை பிரிவில், பரமசிவம் என்பவருக்கு சொந்தமான தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் நகைக்கடையில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நகைக்கடையை ஒட்டி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கும், நகைக் கடைக்கும் இடையே சுமார் 10 அடி இடைவெளியில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.
இந்நிலையில், நேற்று அதிகாலை அரசுப் பள்ளி வழியாக நகைக்கடையின் பின்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள், 3 அடி அகலத்திற்கு சுவரை துளையிட்டு, உள்ளே நுழைந்துள்ளனர். கடைக்குள் தங்க நகைகள் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை திறக்க முயற்சி செய்தபோது, அங்கு பொருத்தப் பட்டிருந்த அலாரம் அடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பினர்.
இதனைத் தொடர்ந்து இரவுநேர காவலாளி மற்றும் அருகில் இருந்தோர் வந்து பார்த்த போது, சுவரில் துளையிடப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. பெருந்துறை ஏ. எஸ்.பி. கவுதம் கோயல், டி.எஸ்.பி. ஆனந்தகுமார் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீஸார், நகைக் கடையைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரிக்கும் பணி நடந்தது. நகைக்கடை மற்றும் அருகே பொருத்தப் பட்டிருக்கும், கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸார் மர்மநபர்களை தேடி வருகின்றனர். அலாரம் அடித்த தால், பல லட்சக் கணக்கான நகைகள் தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT